நினைவு கூறத்தக்க விடுதலை போராட்ட வீரர் உதம் சிங் தூக்கிலிடப்பட்ட தினமின்று

21 ஆண்டுகள் காத்திருந்து 'காரியத்தை' முடித்த ஒரு கர்மயோகி உதம் சிங்- விடுதலை போராட்ட வீரர் உதம் சிங் நினைவு தினமின்று

Update: 2021-07-31 05:03 GMT

நினைவு கூறத்தக்க விடுதலை போராட்ட வீரர் உதம் சிங் தூக்கிலிடப்பட்ட தினமின்று!

21 ஆண்டுகள் காத்திருந்து 'காரியத்தை' முடித்த ஒரு கர்மயோகி உதம் சிங் 1899 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி பிறந்தார். ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த கூட்டத்தில் 20 வயதான உதம் சிங்கும் பங்கேற்று இருந்தார். துப்பாக்கி குண்டுகள் வெடித்து சிதற உதம் சிங் ஓடித்தப்பினார். ஆனால் அவரது நண்பர்களையும் பெற்றோரையும் இழந்தார். தன் கண் எதிரே மக்களை சுட்டு வீழ்த்திய ஆங்கிலேயர் மைக்கேல் ஓ டயரை பழிவாங்க முடிவு செய்தார் உதம் சிங்.

இந்திய விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈந்த ஒவ்வொரு வீரனும் நமக்கு கடவுள் போல என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு சிலிரிப்பூட்டும் ஒன்றாகும். இப்படியெல்லாம் கூட ஒருவர் இருந்திருக்க முடியுமா? இப்படியெல்லாம் கூட ஒருவர் தாய்நாட்டுக்காக தியாகங்களை செய்ய முடியுமா? வாழ்க்கை என்றால் இதுவல்லவா வாழ்க்கை என்று நெகிழ்ந்து போவோம்.

யார் இந்த் உதம் சிங்? அப்படி என்ன தியாகம் செய்துவிட்டார்?

1899 ஆம் ஆண்டு டிசம்பர் 26, அன்று பஞ்சாப் மாநிலத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் உதம் சிங் எனப்படும் ராம் முஹம்மது சிங் ஆசாத். இந்திய விடுதலை வரலாறு கண்ட ஒப்பற்ற மாவீரர்களில் ஒருவர் ராம் முஹம்மது சிங் ஆசாத். உதம் சிங்கின் தந்தை சிறுவயதிலேயே இறந்து விட அவனுக்கு பத்து வயது இருக்கும்போது அவனை ஒரு ஆதரவற்றோர் விடுதியில் சேர்த்தார் அவன் தாய் மாதா நாராயண் கவுர்.

1919 ஆம் ஆண்டு இந்திய விடுதலை வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கருப்பு வருடம். ஆம் அந்த ஆண்டு தான் பஞ்சாபில் 'ஜாலியன் வாலாபாக்' என்கிற இடத்தில் பைசாகி திருவிழாவை முன்னிட்டு கூடிய நூற்றுக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் கூடியிருந்தனர். "இந்த மக்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக புரட்சி செய்ய கூடியிருக்கிறார்கள்" என்று கூறி எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி அம்மக்களை பஞ்சாப் பிரிவின் பிரிட்டிஷ் கமாண்டர் ரெஜினால்ட் டயர் என்பவன் ஆயுதமேந்திய பிரிட்டிஷ் சிப்பாய்களை கொண்டு ஈவிரக்கமின்றி படுகொலை செய்தான். ரெஜினால்ட் டயருக்கு அந்த நேரத்தில் மிக ஆதரவாக இருந்து அவன் செயலை புகழ்ந்தது மைக்கேல் ஓ டயர் என்ற பஞ்சாப் மாகாண ஆளுநர்.

படுகொலை நடந்த அந்நேரம் தீவிரமான சுதந்திர போராட்ட செயல்களில் ஈடுபட்டிருந்த இளைஞரான உதம்சிங் அப்போது மக்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுக்கும் பணியிலிருந்தார். உதம் சிங் அந்த துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பிவிட்டாலும் தன் கண்ணெதிரே தன் நாட்டு மக்கள் குருவி சுடுவது போல சுட்டுக் கொல்லப்பட்டதை அவனால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

ஆனால் அவர் அதற்காக 21 வருடங்கள் பொறுமையாக வியூகம் வகுத்து வந்தார். ஜாலியன் சம்பவத்துக்கு பிறகு கிழக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை விஷயமாகவும், இந்திய சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும் பயணம் செய்தார். அமெரிக்காவில் பல இடங்களுக்கு பயணம் செய்த உதம், இந்திய சுதந்திரத்துக்காக ஆதரவு திரட்டிக்கொண்டு 1927ம் ஆண்டு இந்தியா திரும்பினார். அப்போது அவர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டார். பின்னர் 1931 ம் ஆண்டு விடுதலையான அவர் ஜெர்மனிக்கு தப்பினார். அங்கிருந்து அவர் 1933 ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார்.

1940 ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள காக்ஸ்டன் அரங்கில் மைக்கேல் ஒ டயர் பங்கேற்று பேசவிருக்கிறார் என்ற செய்தி உதம் சிங்கிற்கு கிடைத்தது. பல அதிகாரிகள் பங்கேற்கும் அந்த அந்த நிகழ்ச்சி தான் அவனை கொல்ல சரியான வாய்ப்பு என்று தீர்மானித்த உதம் சிங் அந்த அரங்கிற்கு மாறுவேடத்தில் சென்றார். உயர் மட்ட பாதுகாப்பு அந்த அரங்கிற்கு போடப்பட்டிருந்தது. உதம் சிங் 'பகவத் கீதை' நூலுக்குள் தனது ரிவால்வரை மறைத்து வைத்து உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்.

1940 ம் ஆண்டு மார்ச்13 ம் தேதி லண்டனின் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் உதம். அதே கூட்டத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை அரங்கேற்றிய மைக்கேக் ஓ டயரும் கலந்து கொண்டிருந்தார். கொக்கு மீனுக்காக காத்திருப்பது போல பார்வையாளர்களில் ஒருவராக காத்திருந்தார் உதம் சிங். கூட்டத்தில் பேசிய டயர், "ஜாலியான் வாலா பாக் சம்பவத்திற்கு நான் சிறிதளவும் வருத்தப்படவில்லை. நம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் செய்ததை ஆப்பிரிக்காவிலும் கூட வாய்ப்பு கிடைத்தால் நான் அரங்கேற்றச் சித்தமாக இருக்கிறேன்" என்று ஆணவத்துடன் குறிப்பிட்டான்.


கூட்டத்தில் இருந்த உதம் சிங் திடீரென எழுந்தார்…. "அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப்போவதில்லை சர் மைக்கேல் டயர் அவர்களே" எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். 20 ஆண்டு கால குறியல்லாவா? ஒரு இன்ச் கூட குறி தவறவில்லை. ரிவால்வரின் முதல் குண்டு அவன் மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் துளைக்க, தாக்கப்பட்ட மைக்கேல் டயர் அங்கேயே சுருண்டு விழுந்து செத்துப் போனான்.

துப்பாக்கி குண்டு உடலில் துளைத்தால் எப்படி இருக்கும் என்று அவன் உணர்ந்தே இறந்திருப்பான். அந்நேரம் டயர் தவிர அப்போது மேடையில் இருந்தவர்களுள் ஒருவரான இந்திய அரசு செக்ரட்டரி செட் லாண்ட் பிரபு எனவரும் காயமடைந்தார். லாமிங்டன் என்கிற பிரிட்டிஷ் பிரபுவின் கை சிதறிப் போனது. என்ன நடக்கிறது என்று மற்றவர்கள் ஊகிக்கும் முன்னே இது நடந்து முடிந்துவிட்டது.ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உயிர்ப்பலிக்கு பழிவாங்கினார் உதம் சிங்.

உதம் சிங் தப்பிக்க முயற்சிக்கவில்லை. மிகப் பெரிய சாதனையை நிகழ்த்திவிட்ட களிப்பில் இன்குலாப் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். போலீசார் விரைந்து வந்து உதம் சிங்கை பிடித்து கைவிலங்கிட்டனர். எந்தவிட ஆர்ப்பாட்டமும் இன்றி புன்னகைத்தபடியே அவர்களுடன் சென்றார் உதம் சிங்

''என் மக்களின் ஆன்மாவால் நான் நொறுங்கினேன். அதனால் நான் அவனை நொறுக்கினேன்'' என்று சொன்னார் உதம் சிங். டயரை பழிவாங்குவதற்காக நான் 21 ஆண்டுகள் காத்திருந்தேன் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த உதம் சிங் "நான் ஒரு இந்தியன். என்னை தனிமைப்படுத்தும் எந்த மத அடையாளமும் எனக்கு வேண்டாம்" என்று கூறி தனது இனத்தின் அடையாளங்கள் அனைத்தையும் துறந்தவன் இந்த வீரன். இவரை நேரில் பார்த்தால் இவர் என்ன இனம், மதம் எதுவுமே ஒருவருக்கு புரியாது. இவர் ஒரு கிறுக்கன் என்றனர் சிலர். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றனர் சில தேசியத் தலைவர்கள்.

ஆம்… மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அழைக்கப்பட்டவர் தான் 20 ஆண்டுகள் காத்திருந்து பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து, இங்கிலாந்தை அடைந்து, ஆயிரக்கணக்கான அப்பாவி இந்தியர்களை சுட்டுப் பொசுக்கிய கயவனை பழி தீர்த்தார். தன்னந்தனியாக யாருடைய உதவியும் இல்லாமல் இதை உதம் சிங் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோர்ட்டில் வாக்குமூலம் கொடுக்கும்போது சத்தியப் பிரமாணம் எடுத்துகொள்ள ஏதேனும் ஒரு நூலை தேர்வு செய்யச் சொன்னார்கள். உதம் சிங் தேர்வு செய்தது எதைத் தெரியுமா? பஞ்சாபி மொழியில் வெளியான காதல் காவியமான 'ஹீர் வரிஸ் ஷா' என்னும் நூலை.

31 ஜூலை 1940 – மாவீரன் தூக்கிலிடப்பட்டான். நூற்றுக்கணக்கான அப்பாவி இந்தியர்களை கொன்ற சதிகாரனுக்கு துணைபோன ஒரு அரக்கனை பழி தீர்த்த மகிழ்ச்சியோடு மனநிறைவோடு தவப்புதல்வன் இந்த பூமியிலிருந்து விடைபெற்றான்.

"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள். இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்" என்று கேட்டுக்கொண்டார் உதம் சிங்.

(* மைகேல் ஓ டயரை உதம் சிங் கொன்று பழி தீர்த்துவிட்டார். மற்றொரு மிருகம் ரெஜினால்ட் டயருக்கு என்ன ஆயிற்று? உதம் சிங் அவனை கொல்லும் முன்பே அவன் இறந்து விட்டான். பல நூறு அப்பாவி மக்களை கொன்று குவித்த ரெஜினால்ட் டயர் இறுதிக் காலத்தில் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்து வாயும் இழுத்துக்கொண்டு பேசக் கூட முடியாத நிலையில், மூளையில் ரத்தக் குழாய் வெடித்து இறந்துபோனான். கொடுங்கோலனுக்கேற்ற முடிவு தான்!)

உதம் சிங் போன்ற பல வீரர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நம் இளைஞர்கள் நடிகர்கள் பின்னே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். காந்தியையும் நேருவையும் விட்டால் வேறு யாரும் நம் சுதந்திரத்திற்குப் பாடுபடவில்லையோ என்று குழந்தைகள் கருதும் அளவிற்கு பாடத்திட்டங்கள் பள்ளிகளில் நோஞ்சானாக இருக்கின்றன. உதம் சிங் போன்றவர்களை நம் அடுத்தத் தலைமுறையினர் அறிவார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

Tags:    

Similar News