ஒமைக்ரான்: மூன்றாம் அலைக்கான அச்சாரமா?
ஒமைக்ரான் எனப்படும் புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா கடந்த வாரம் தென் ஆப்பிரிக்க நாட்டில் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது;
ஒமைக்ரான் எனப்படும் புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கடந்த வாரம் தென் ஆப்பிரிக்க நாட்டில் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து
பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் புதிய வகை கொரோனா பரவிவருகிறது. ஆயிரக்கணக்கானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகை கொரோனா அதிவேகமாகப் பரவக் கூடியது. அபாயம் நிறைந்ததாகவும் கூறப்படுகிறது. தடுப்பூசிகளையே எதிர்க்கும் ஆற்றல் படைத்தது என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடனான விமான சேவைகளை ரத்துசெய்துள்ளன. அமெரிக்கா ஆப்பிரிக்க நாட்டு பயணிகளை தீவிரமாக பரிசோதனை செய்து அனுமதிக்கிறது. இச்சூழலில் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய அரசு, தென் ஆப்பிரிக்க வகை வைரஸ் பரவல் காணப்படும் நாடுகளிலிருந்து வருவோரை மிக தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து பல்வேறு மரபணுப் பிறழ்வுகளை அடைந்து வருவது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். இப்போது இதன் புதிய பிறழ்வு வகை தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வகையை பி.1.1.529 என்றுதான் குறிப்பிட்டு வந்தார்கள். இந்தப் பிறழ்வு வகை வைரசுக்கு 'ஓமைக்ரான்' என்ற பெயரை உலக சுகாதார நிறுவனம் தற்போது சூட்டி இருக்கிறது.
ஓமைக்ரான் வீரியம் மிக்கதாக காணப்படுவதால் இதன் மூலம் தொற்று அதி வேகமாக ஏற்படுவதாகத் தெரிகிறது. தென் ஆப்பிரிக்காவில் உருவான இது அங்கிருந்து பயணித்தவர்கள் மூலம் போத்ஸ்வனா, ஹாங்காங், பெல்ஜியம், இஸ்ரேல், டென்மார்க் போன்ற நாடுகளுக்குப் பரவி இருக்கிறது. வேறெந்த நாடுகளுக்கெல்லாம் பரவியிருக்கிறது என்ற தகவல் இனிமேல்தான் தெரிய வரும்.
சில நாட்களுக்கு முன்பு வரை இந்த வகை வைரஸ் குறித்துப் பெரிய கவலை கொள்ளத் தேவை இல்லை என்று சொல்லி வந்த உலக சுகாதார அமைப்பு இப்போது 'கவலை தரும் புதிய வகை' என்று கூறியுள்ளது
மத்திய அரசும் புதிய வகை ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. மருத்துவ ஆய்வாளர்கள் அனைவரிடமும் தற்போது புழங்கும் ஒற்றை சொல் 'ஓமைக்ரான்'.
பிரதமர் நரேந்திர மோடி சுகாதார துறை உயர் அதிகாரிகளிடம் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "ஒமைக்ராவால் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்தும், அந்த நாடுகளுக்கும் உடனடியாக விமான சேவையை மத்திய அரசு நிறுத்த வேண்டும். கொரோனாவிலிருந்து பெரும் இடர்ப்பாடுகள், சிரமங்களுக்குப் பின் நம் தேசம் விடுபட்டுள்ளது. இந்தியாவுக்குள் ஒமைக்ரான் வராமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கைளையும் எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாம் அலையை ஓமைக்ரான் தான் ஆரம்பித்து வைக்குமா என்பதுதான் அனைவர் மனதிலும் இருக்கும் முக்கிய கேள்வி. விடை விரைவில் தெரிந்து விடும். அது வரை அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். கொரோனா தடுப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுங்கள்.