அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்
ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, அவர் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்ய மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.;
ராகுல் காந்தி.
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ”அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று பேசியதாக சர்ச்சை எழுந்தது.
அதனடிப்படையில், பாஜக எம்எல்ஏ-வும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல்காந்தி ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் இழிவுபடுத்தி விட்டதாக கூறி குஜராத் மாநிலம், சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி எனவும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாகவும் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் அறிவித்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எம்பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை, வரும் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள வீட்டில் ராகுல் காந்தி வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.