மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது மம்தா பானர்ஜி சாடல்

தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி கேலித்கூத்தாக மாறி வருகிறது. அதற்கு மோடி நடத்தி விதி என மறுபெயரிட வேண்டும் என மம்தா கூறியுள்ளார்;

Update: 2024-05-07 14:07 GMT

மம்தா பானர்ஜி

பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் மவுனம் காத்து வருகிறது. பாஜக ஆட்சியில் தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி மோடி நடத்தை விதியாக மாறிவிட்டது என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

மோடி மற்றும் மற்ற பாஜக தலைவர்களின் வெறுப்பு நிறைந்த பேச்சுகள் குறைந்த சாதி இந்துக்கள், சிறுபான்மையினர், மற்ற விளிம்பு நிலையில் உள்ள பிரிவுகளில் உள்ள மக்களை மிரட்டுவதுபோன்று உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் மௌனம் காத்து வருகின்றது.

தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி கேலித்கூத்தாக மாறி வருகிறது. அதற்கு மோடி நடத்தி விதி என மறுபெயரிட வேண்டும். இருந்தபோதிலும், நாட்டு மக்களின் உரிமைகளை மீறும் ஒவ்வொரு செயலுக்கு எதிராகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.

2014-ல் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? பெண் குழந்தைகளை பாதுகாப்பதாக கூறிய அவருடைய "பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் " என்ன ஆனது?.

அன்னபூர்னா பந்தர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் ஏழை பெண்களுக்கு 3 ஆயிரம் கொடுப்பதாக போலி வாக்குறுதியை அளித்து வருகிறார்கள். பா.ஜனதா 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்தவர்களுக்கான சம்பளத்தை மூன்று வருடங்களாக நிறுத்தி வைத்துள்ளது. பா.ஜ.க.வும் அரிசிக்கு ஒரு பைசா கூட விடுவிக்கவில்லை, எங்கள் ஏழைகள் நெருக்கடியை உணரக்கூடாது என்பதற்காக முழுத் தொகையையும் நாங்கள் தோளில் சுமந்துள்ளோம்.

பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், தலித்கள் மற்றும் மற்ற சமூகத்தினரை நாட்டில் இருந்து வெளியேற்றும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி தலித்கள், எஸ்டிகள், ஓபிசிக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் அடையாளத்தை இழக்க சதி செய்கிறது என கூறியுள்ளார் 

Tags:    

Similar News