தக்காளி காய்ச்சல்: கேரளாவில் பரவும் புதுவகை வைரஸ்
தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் காரணமாக கேரளாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி;
கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்பட பல அறிகுறிகளுடன் 5 வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவது தெரியவந்தது.
இதை தொடர்ந்து ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதார துறை அதிகாரிகள் முகாமிட்டு நிலைமை குறித்து கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதார துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
கொல்லம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள குழந்தைகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.