பெண்களுக்கான புதிய சேமிப்பு திட்டம்- மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
பெண்களுக்கான புதிய மகிளா சம்மன் என்ற பெயரில் சேமிப்பு திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
2032 -24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மக்களவையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது ஏழை மற்றும் நடுத்தர மக்கள், சம்பளதாரர்கள், பெண்கள், முதியோர் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து உள்ளார்.
அவர் பெண்களுக்காக அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் மகிளா சம்மன் சேமிப்பு திட்டம்.இந்த திட்டத்தின்படி பெண்கள் அதிக பட்சமாக தங்களது பெயரில் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம். இந்த முதலீட்டு தொகைக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.7.5 சதவீதம் வரை நிரந்தர வட்டி வழங்கும். மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் என்ற இந்த திட்டம் பெண்களுக்கான பிரத்யேகமான சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது.
பெண்கள் நலன் கருதி தானும் ஒரு பெண் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள இந்த திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. எனவே பெண்கள் இனி அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு யாரிடமாவது பணம் கொடுத்து ஏமாற வேண்டியது இல்லை. மத்திய அரசே அவர்களுக்கு நியாயமான வட்டியை வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.