Nehru In Tamil: ஆசிய ஜோதி நேருவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர் என்பதால் இவர் பிறந்தநாள் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு (நவம்பர் 14, 1889 – மே 27, 1964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
'காசஷ்மீரப் பண்டிதர்' என்ற பிராமண குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார். (காஷ்மீரக் கால்வாயைக் குறிக்கும் நெஹர் என்ற மருவி நேரு ஆயிற்று.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரில், 1889-ம் ஆண்டு நவம்பர் 14 அன்று பிறந்தார் ஜவஹர்லால் நேரு. இவருடைய அப்பா மோதிலால் நேரு. அம்மா ஸ்வரூப ராணி.
மிக வசதியான குடும்பம் என்பதால் வீட்டிலேயே நேரு கல்வி பயில ஏற்பாடு செய்திருந்தார் மோதிலால். ஆனந்த பவன் மாளிகையில் தங்கைகள் விஜயலட்சுமி, கிருஷ்ணாவுடன் வளர்ந்தார்.
15 வயதில் பள்ளிப் படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். புதிய சூழலும் பாடங்களும் கடினமாக இருப்பதாக நினைத்தாலும் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.
1907-ம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வு எழுதி, டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து, இயற்கை அறிவியல் படித்தார். பின்னர் அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப சட்டம் பயின்றார்.சட்டப் பணிகள் செய்வதற்காக இந்தியா திரும்பினார். 1916-ம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்துக்கு மோதிலாலுடன் சென்று, காந்தியைச் சந்தித்தார்.
1916 ஆம் ஆண்டில் பிப்ரவரி 7 ஆம் தேதியில் கமலா கவுலைத் திருமணம் செய்துகொண்டார் நேரு. அடுத்த ஆண்டு மகள் இந்திரா ப்ரியதர்ஷினி பிறந்தார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாகச் செயல்பட்டார். ஆனால் 1936 இல் கமலா இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்
1919, ஏப்ரல் 13 லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரஸ் கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.
1920-ம் ஆண்டு மிகப் பெரிய அளவில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் முதல் முறை பங்கேற்றார் நேரு. இதற்காகத் தேச துரோகக் குற்றச்சாட்டில் 1921-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, முதல் முறை சிறைக்குச் சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார்.
முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.
செளரிசெளராவில் ஏற்பட்ட வன்முறையால் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டார் காந்தி. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு போன்றவர்கள் ‘சுயராஜ்ய கட்சி’யை ஆரம்பித்தனர். காந்தி மீதுள்ள அபிமானத்தால் தந்தை ஆரம்பித்த கட்சிக்குச் செல்லாமல், இந்திய தேசிய காங்கிரஸிலேயே இருந்தார் நேரு. காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குப் பெற்ற தலைவராகத் திகழ்ந்தார்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுமார் 9 வருடங்களைச் சிறையில் கழித்திருக்கிறார்.
10 வயது இந்திரா விடுதியில் தங்கிப் படித்தபோது, அவருக்கு 30 கடிதங்களை நேரு எழுதினார். இயற்கை, வரலாறு, உலக நாகரிங்கள் குறித்து எழுதப்பட்ட இந்தக் கடிதங்கள், 1929-ம் ஆண்டு ’தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. உலகப் புகழ்பெற்றது.
1930 முதல் 1933 வரை சிறையில் இருந்தபோது இந்திராவுக்கு உலக வரலாறு குறித்து 196 கடிதங்களை எழுதினார். இது Glimpses of World History என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்து புகழ்பெற்றது. The Discovery of India, Toward Freedom (சுயசரிதை) போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
1947-ம்ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட நேரு, விவசாயத்தையும் தொழிற்துறையையும் முன்னேற்றும் விதத்தில் ஐந்தாண்டு திட்டங்களைக் கொண்டுவந்தார். மதச்சார்பின்மை, மதநல்லிணக்கத்தை ஆதரித்தார்.
குழந்தைகள், இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது என்று நம்பினார். அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS), இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IIT), இந்திய மேலாண்மைக் கழகங்கள் (IIM) தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (NIT) உட்பட ஏராளமான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்கினரர்
அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதத்தில் பஞ்சசீலக் கொள்கை, அணி சாரா இயக்கம் போன்றவற்றை உருவாக்கினார். இதனால் நேருவுக்கு உலக நாடுகள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.
குழந்தைகளுக்கு. கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் பள்ளிகளை உருவாக்கினார். குழந்தைகள் நேருவின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததால், ‘நேரு மாமா’ என்று அழைத்தனர். நேருவின் பிறந்த நாள் இந்தியாவில் ‘குழந்தைகள் தின’மாகக் கொண்டாடப்படுகிறது.
பி.ஆர்.அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சட்டபூர்வமாகக் கையெழுத்திட்டு அமல்படுத்தினார் நேரு.
ஆசியாவில் செல்வாக்கு மிகுந்த தலைவராக வலம் வந்தார். ‘ஆசியாவின் ஜோதி', ‘நவீன இந்தியாவின் சிற்பி' என்று அழைக்கப்பட்டார்.
அரசியல்வாதி, பிரதமர், ராஜதந்திரி, அறிஞர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட நேரு, 1964-ம் ஆண்டு மே 27 அன்று உடல்நலம் குன்றி மறைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் 15 லட்சம் பேர் பங்கேற்றார்கள்.
என்னைப் பற்றி யாராவது சொல்ல நினைத்தால், ’இந்த மனிதரின் மூளையும் இதயமும் இந்தியாவையும் இந்திய மக்களையும் நேசித்தன. பதிலுக்கு மக்களிடமிருந்து ஏராளமான அன்பையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொண்டார்’ என்றே சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் நேரு.