"ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்" கடலில் கலக்கும் குப்பைகளில் 50%-க்கும் அதிகம்..!
கடலில் கலக்கும் குப்பைகளில் 50%-க்கும் அதிகமானவை, ஒரு முறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக் ஆகும்- தேசிய கடலோர ஆராய்ச்சி மையம்.;
இந்தியாவில் உள்ள பல்வேறு கடற்கரைகளில், சென்னையைச் சேர்ந்த தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் கடலில் கலக்கும் குப்பைகளில் 50%-க்கும் அதிகமானவை, ஒரு முறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக் என தெரியவந்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய புவிஅறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், சென்னையைச் சேர்ந்த தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், இந்தியா முழுவதும் உள்ள கடற்கரைகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில், கடலோர கண்காணிப்பு மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு நடத்திய ஆய்வில், 2018 முதல் 2021 வரையிலான காலத்தில் கடலில் கலந்த குப்பைகளில் (கழிவுகளில்) 50%-க்கும் மேற்பட்டவை ஒரு முறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக் என்று தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அலைகளுக்கு இடையிலான பகுதியில் காணப்படும் கழிவுகளைவிட, கரைப்பகுதியில் தான் அதிக குப்பைகள் கொட்டப்படுவது தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார். அதிலும், கிராமப்புற கடற்கரைகளைவிட, நகர்ப்புற கடற்கரைகளில்தான் அதிக குப்பைகள் சேருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பருவமழைக் காலத்தில் இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெருமளவிலான நுண்ணிய பிளாஸ்டிக்குகள் கலந்திருப்பது தெரியவந்திருப்பதுடன், ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக்குகள் அதிக அளவில் காணப்படுவதாகவும் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.