புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்;

Update: 2023-07-01 11:02 GMT

புதிய நாடாளுமன்ற கட்டடம் 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில்அவர் விடுத்துள்ள பதிவில், 2023ம் ஆண்டுக்கான மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும். இந்த கூட்டத்தொடரின்போது கொண்டு வரப்பட உள்ள சட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை உள்ள 23 நாட்களில் 17 நாட்கள் நாடாளுமன்றம் கூடும் என தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் கடந்த மே 28ம் தேதி திறக்கப்பட்டதை அடுத்து கூடும் முதல் கூட்டத் தொடர் இது. இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொடங்கி பின்னர் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் இந்தக் கூட்டத் தொடர் கூடுவதால், இதில் 'புயல்கள்' அதிகமாக வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப, எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி வலுவாக கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பான ஆலோசனைகளை முடுக்கிவிட இந்த கூட்டத் தொடரை ஆளும் கூட்டணி பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், டெல்லி அரசின் சேவை அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News