ஓணம் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகையை யொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளாவின் வருடாந்தர அறுவடைத் திருவிழாவிற்கு பெயர் ஓணம். திருஓணம் அல்லது திருவோணம் என்றும் அழைக்கப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 ஆம் தேதி முடிவடைகிறது. இது இந்தியாவின் கேரளாவில் உள்ள மலையாளி சமூகத்தால் மிகவும் ஆடம்பரத்துடனும் ஆர்வத்துடனும் நடத்தப்படும் மிக முக்கியமான கலாச்சார கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.
ஓணம் மொத்தம் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஒரு மகத்தான விழா என்றாலும் பொன்னோணம் எனப்படுவது ஆகஸ்ட் 29ம் தேதியாகும். திருவோண நட்சத்திரம் ஆகஸ்ட் 29ம்தேதி அதிகாலை 2.43மணிக்கு தொடங்கி 30ம்தேதி நள்ளிரவு 11.50 மணி வரை இருப்பதால் அன்றைய தினமே ஓணம் பண்டிகையின் முக்கிய நாளாக கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் அறுவடை மற்றும் மன்னன் மகாபலி வீடு திரும்புவதையொட்டி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்க்கை நல்ல ஆரோக்கியம், இணையற்ற மகிழ்ச்சி மற்றும் மகத்தான செழிப்புடன் பொழியட்டும். கடந்த பல ஆண்டுகளாக, ஓணம் ஒரு உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது, மேலும் இது கேரளாவின் துடிப்பான கலாச்சாரத்தை அழகாக வெளிப்படுத்துகிறது" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.