ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய போர் விமானம்
இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி பாராட்டி உள்ளார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில், மிக்-29கே ரக போர் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியது. இது வரலாற்று மைல்கல் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று இரவு அரபிக்கடலில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் போர்க்கப்பலில் விமானத்தை தரையிறக்குவது சவாலான விஷயம், இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பது, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் பணியாளர்கள் மற்றும் கடற்படை விமானிகளின் மன உறுதி, திறமையை நிரூபித்திருப்பதாக கடற்படை கூறியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ஐஎன்எஸ் விக்ராந்தில் மிக்-29கே விமானத்தை முதல்முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்திய கடற்படை மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இது தன்னம்பிக்கையை நோக்கிய கடற்படையின் உத்வேகத்தை குறிக்கிறது, என்றார்.
இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார். விக்ராந்த் கப்பலில் போர் விமானம் தரையிறங்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை கடற்படை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் 40,000 டன் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பல்களை தயாரிக்கும் திறன் கொண்ட நாடுகளின் உயரடுக்கு குழுவில் இந்தியாவும் இணைந்தது.