தியாகியின் மகள் காலில் விழுந்து பிரதமர் மோடி மரியாதை..!
ஆந்திர மாநிலத்தில், தியாகியின் 90 வயது மகள் காலை தொட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்திய நிகழ்வு பெரிதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திரா மாநிலம், பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூ 125-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு, தியாகி அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் பீமாவரத்தில் டிஜிட்டல் இந்தியா பாஷினி, டிஜிட்டல் இந்தியா ஜெனசிஸ் உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, ஆந்திரா சுதந்திர போராட்ட தியாகி பசல கிருஷ்ணமூர்த்தியின் 90 வயது மகள் பசல கிருஷ்ண பாரதியை சந்தித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அப்போது அவரது காலைத்தொட்டு நரேந்திர மோடி கும்பிட்டார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை பெரிதும் மனம் நெகிழ வைத்தது. இதையடுத்து சமூக வலைதளங்களில் பிரதமர், தியாகியின் மகள் காலில் விழும் புகைப்படங்கள் வைரலாகி பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு முன்பு ஒருமுறை, 2022 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருது வழங்கும் நிகழ்வில், 125 வயதான யோகா குரு சுவாமி சிவானந்தா, பிரதமர் காலில் விழுந்து வணங்கினார். அப்போது பதிலுக்கு பிரதமர் மோடியும் தரையை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினார். மேலும் சத்தீஸ்கரில் ஒரு குக்கிராமத்தில் வசித்து வரும் மூதாட்டி தொலைக்காட்சி பார்ப்பது இல்லை. செய்தித்தாள்களையும் வாசிப்பது இல்லை. ஆனாலும், துய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆடுகளை விற்று கழிப்பறை கட்டி இருந்தார். இந்த மூதாட்டி காலில் விழுந்து பிரதமர் மோடி மேடையில்,பரபரப்பை ஏற்படுத்தினார்.
பா.ஜ.க உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் மேடையில் ஏறி, பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை பரிசளித்தபோது, பிரதமர் மோடியின் பாதத்தைத் தொட்டு வணங்கினார். உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பிரச்சார மேடையில் பிரதமர் நரேந்திர மோடி கால்களை தொட்டு வணங்கிய பட்டியலினத்தை சேர்ந்த அந்த தலைவரிடம், நோ, நோ என்று கூறிய பிரதமர், அவரது காலில் பதிலுக்கு விழுந்த வீடியோ வைரலானது.
அதற்கு முன்பாக, பிரச்சார கூட்டம் ஒன்றில், பா.ஜ.க தொண்டர்கள் கூட்டத்துக்கு இடையே மூத்த தலைவர் அத்வானி காலில் மோடி விழுந்து ஆசி பெற்றதும் பரவலாக பேசப்பட்டது. இதேபோல, வாஜ்பாய், பிரதமராக இருந்தபோதும், பெண்களின் நலனுக்காக பாடுபட்ட தமிழகத்தின் மதுரையை சேர்ந்த சின்னப்பொண்ணுவின் காலில் விழுந்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.