திரிபுரா முதல்வராக மாணிக் சாஹா 2வது முறையாக பதவியேற்பு
திரிபுராவின் முதல்வராக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் மாணிக் சாஹா இரண்டாவது முறையாக புதன்கிழமை பதவியேற்றார். அவருடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பாஜக தலைவர் மாணிக் சாஹா, திரிபுரா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.. விவேகானந்தா ஸ்டேடியத்தில் நடைபெற்ற சாஹா மற்றும் அவரது அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி காலை 10.45 மணிக்கு அகர்தலா சென்றடைந்தார். சாஹாவுடன் மேலும் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றனர்.
முன்னதாக பாஜக திரிபுரா பிரிவு தலைமை செய்தித் தொடர்பாளர் சுப்ரதா சக்ரவர்த்தி “கடந்த முப்பது ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலத்தில் எந்த இடதுசாரி எதிர்ப்பு அரசாங்கமும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வது இதுவே முதல் முறை. விவேகானந்தர் மைதானத்தில் மாணிக் சாஹா இரண்டாவது முறையாக மாநில முதல்வராக பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். பாஜக 2.0 அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று தெரிவித்தார்.
1988ல் காங்கிரஸ்-டியூஜேஎஸ் எல்லை மாநிலத்தில் இடதுசாரிகளை தோற்கடித்து ஆட்சி அமைத்தது, ஆனால் 1993ல் கம்யூனிஸ்டுகளிடம் தோற்றது.
திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. திரிபுராவில் 60 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் பாஜக 32 இடங்களை வென்றது, அதே நேரத்தில் அதன் கூட்டணிக் கட்சியான IPFT (திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி) ஒரு இடத்தைப் பெற முடிந்தது.
பாஜக மற்றும் ஐபிஎஃப்டியின் கூட்டு சட்டமன்றக் கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, மார்ச் 6 அன்று அகர்தலாவில் ஆளுநரை சஹா சந்தித்தார் . அவரை மாநிலத்தின் 12வது முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை காரணம் காட்டி, திரிபுரா காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர்.
திரிபுராவில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் குறைந்தது 8 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்திருந்தனர். மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரிவித்தனர்.