காட்டிக் கொடுத்த கிளி: மாட்டிக் கொண்ட கொலையாளி

வழக்கு முழுவதும் கிளி குறிப்பிடப்பட்டது, ஆனால் சாட்சியச் சட்டத்தில் அதற்கு இடமில்லாததால், ஆதாரமாக முன்வைக்கப்படவில்லை.

Update: 2023-03-25 07:53 GMT

கிளியின் சாட்சியம்,  குற்றவாளி கைது 

ஆக்ராவின் முன்னணி செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் விஜய் சர்மாவின் மனைவி நீலம் ஷர்மா, பிப். 20, 2014 அன்று அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். கொலையைத் தொடர்ந்து, அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது, ஆனால் கொலையாளியை காவல்துறையினரால்  கண்டுப்பிடிக்க முடியவில்லை.

பிப். 20, 2014 அன்று விஜய் சர்மா தனது மகன் ராஜேஷ் மற்றும் மகள் நிவேதிதாவுடன் திருமணத்தில் பங்கேற்பதற்காக தனது வீட்டை விட்டு வெளியே சென்றார். இரவு வெகுநேரம் கழித்து விஜய் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மனைவி மற்றும் செல்ல நாய் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருவரும் கூர்மையான பொருளால் கொல்லப்பட்டனர். காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து மர்மநபர்கள் சிலர் பிடிபட்டனர்.

மறுபுறம் விஜய் சர்மாவின் செல்லக் கிளி சாப்பிடுவதையும் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தது. அந்தக் கிளி கொலையை நேரில் பார்த்திருக்கலாம் என்று சர்மா சந்தேகப்பட்டார். கிளியின் சோகத்தை பார்த்து சந்தேகமடைந்த விஜய் சர்மா, மருமகனை விசாரிக்குமாறு காவல்துறையிடம் கோரிக்கை விடுத்தார்.

கிளியின் முன்னால் சந்தேகப்படும் நபர்களை ஒவ்வொன்றாகப் கூற ஆரம்பித்தபோது, கிளி ஆஷூவின் பெயரைக் கேட்டு திகிலடைந்தது மற்றும் "ஆஷு-ஆஷு" என்று கத்த ஆரம்பித்தது. காவல்துறையினர் முன்னிலையில் கூட, கிளி ஆஷூவின் பெயரைக் கேட்டபோது நடுங்கியது. இதையும் காவல்துறையினர் தங்கள் விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர். மருமகன் ஆஷு, தனது நண்பர் ரோனி மாசியின் உதவியுடன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலை நடந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று, சிறப்பு நீதிபதி முகமது ரஷீத், ஆஷூவின் வாக்குமூலம் மற்றும் அடுத்தடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ஆஷு மற்றும் ரோனி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ. 72,000 அபராதமும் விதித்தார்.

ஷர்மாவின் மகள் நிவேதிதா ஷர்மா கூறுகையில், ஆஷு வீட்டிற்கு வந்து செல்வார், பல ஆண்டுகளாக தங்கியிருந்தார். எம்பிஏ பட்டப்படிப்பு படிக்க தந்தை ரூ.80,000 கொடுத்தார். வீட்டில் நகைகள் மற்றும் பணம் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்த ஆஷு அதை கொள்ளையடிக்க திட்டமிட்டார். வளர்ப்பு நாயை கத்தியால் 9 முறையும், நீலத்தை 14 முறையும் குத்தினார், கொலை மற்றும் கொள்ளையடிப்பது மட்டுமே அவரது ஒரே நோக்கம். எனது பெற்றோர் ஆஷுவை தூக்கிலிட வேண்டும் என்று விரும்பினர், மேலும் அவரைத் தண்டிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளோம் என்று கூறினார்.

வழக்கு முழுவதும் கிளி குறிப்பிடப்பட்டது, ஆனால் சாட்சியச் சட்டத்தில் அதற்கு இடமில்லாததால், ஆதாரமாக முன்வைக்கப்படவில்லை.

இந்தச் சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்தப் பறவை இறந்துவிட்டதாக நிவேதிதா கூறினார். 2020ல் கோவிட்-19 தொற்றுநோயின் போது விஜய் சர்மா இறந்தார்.

Tags:    

Similar News