அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறார் மல்லிகார்ஜுன் கார்கே
Mallikarjun Kharge become All India Congress president
அன்னி பெசன்ட் அம்மையாரால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் அகில இந்திய தலைவராக மகாத்மா காந்தியில் தொடங்கி எத்தனையோ தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்திருக்கிறார்கள். நாடு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் முதல் அகில இந்திய தலைவராக ஆச்சாரியார் கிருபளானி தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு பட்டாபி சீதாராமய்யர் இருந்தார்.
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, நீலம் சஞ்சீவரெட்டி, கே.காமராஜ் நிஜலிங்கப்பா ஆகியோரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அலங்கரித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மனித வெடிகுண்டுக்கு பலியான பின்னர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்மராவ் சிறிது காலம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். அதன் பின்னர் சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவர் ஆனார்.
இதனை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு முதல் சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வருகிறார். இடையில் சிறிது காலம் ராகுல் காந்தி எம்.பி. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதன் பின்னர் சோனியா காந்தியே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மீண்டும் தனது பணியை தொடர்கிறார்.
இந்த சூழலில் தான் காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 22 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவில்லை. ஒரு மனதாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வேண்டும் என ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் எதிர்பார்த்தனர். தங்களது விருப்பத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றியும் பார்த்தனர். இந்த கோரிக்கையை 'பாரத் ஜோடோ யாத்ரா' என்கிற ஒற்றுமை பயணத்தில் உள்ள ராகுல் காந்தியிடம் எடுத்துக் கூறினார்கள். ஆனால் அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கவும், தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவும் தனக்கு விருப்பமில்லை என கூறி முடித்து விட்டார்.
இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜஸ்தான் மாநில மூத்த தலைவரும் அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வருபவருமான அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. சோனியா காந்தியும் அவருக்கு ஆதரவளித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் கொள்கை விதிமுறைப்படி ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றால் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது. அசோக் கெலாட் ராஜினாமா செய்த பின்னர் சச்சின் பைலட்டை ராஜஸ்தான் மாநில முதலமைச்சராகவும் முடிவு செய்யப்பட்டது. இதனை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அவர்கள் திடீர் போர்க்கொடி தூக்கினார்கள். போராட்டத்தின் பின்னணியில் அசோக் கெலாட் இருப்பதாகவும் சோனியாவுக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக அசோக் கெலாட் மீது சோனியா காந்தி கடும் கோபத்தில் இருந்தார். இதனைத் தொடர்ந்து அசோக் கெலாட் சோனியா காந்தியை சந்தித்து ராஜஸ்தானில் தனது ஆதரவாளர்கள் கட்சியின் மேலிடத்திற்கு நிர்ப்பந்தம் அளித்து நெருக்கடியை ஏற்படுத்திய விவகாரத்துக்கு பொறுப்பு ஏற்று அவர் சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்டார். இந்த சந்திப்பை தொடர்ந்து அசோக்கெலாட் நிருபர்களிடம் பேசுகையில் நான் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி பதவியில் தொடர்வேனா என்பதை சோனியா காந்தி தான் முடிவு செய்வார் என கூறிவிட்டு சென்றார். இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடவில்லை என்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் புதிய திருப்பமாக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும் மாநிலங்களவை எம்.பி.யுமான 75 வயது திக் விஜய் சிங் போட்டியிடப் போவதாக நேற்று பரபரப்பான தகவல் வெளியானது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் இன்று என்பதால் அடுத்தடுத்து தொடர்ந்து திருப்பங்கள் ஏற்பட்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற தொகுதி எம். பி. யும்,முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே. என். திரிபாதியும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் திருப்பமாக டெல்லி நாடாளுமன்ற ராஜ்யசபா காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஏ. கே. ஆண்டனி உள்பட 10 முன்னணி தலைவர்கள் முன்மொழிந்தனர். மல்லிகார்ஜுன் கார்கே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக நேற்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக 22 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ள காங்கிரஸ் தேர்தலில் போட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சோனியா காந்தி ஆதரவு இருப்பதால் தான் 10 முன்னணி தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே வேட்பு மனுவை முன்மொழிந்திருக்கிறார்கள். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு செய்யப்படுவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது. மல்லிகார்ஜுன் கார்கே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 80 வயதான இவர் கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா தொகுதியில் இருந்து 2009 முதல் 2020 ம் ஆண்டு வரை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணை தலைவராகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் ஏற்கனவே பதவி வகித்து உள்ளார். மத்திய ரயில்வே மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து உள்ளார். மல்லிகார்ஜுன் கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் ஏற்கனவே இருந்த பெருந்தலைவர் காமராஜர், பட்டாபி சீதாராமய்யர் , நிஜலிங்கப்பா,நரசிம்மராவ் ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்த தலைவர்களின் வரிசையில் இவரும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.