எதிர்க்கட்சிகள் வீசி அடிக்கும் சேற்றில் தாமரை மலரும்: பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் எம்ஜிஆர், கருணாநிதி போன்ற ஜாம்பவான்களின் ஆட்சிகளளை காங்கிரஸ் கலைத்தது என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத்திற்கு பதில் அளித்து லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். அவர் பேச தொடங்கிய போது அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி கடும் அமளியியில் ஈடுபட்டன. அப்போது பேசிய பிரதமர், எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்து கொண்டு தான் இருக்கும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களில் சமஸ்கிருத வார்த்தைகள் இருப்பது சிலருக்கு பிரச்னையாக இருந்தது. காந்தி-நேரு குடும்பத்தின் பெயரில் 600 மத்திய அரசின் திட்டங்கள் இருப்பதாக செய்தித்தாள்களில் படித்தேன். அவர்களுடைய தலைமுறையை சேர்ந்தவர்கள் நேருவை ஏன் குடும்ப பெயராக வைத்துக் கொள்ளவில்லை என்பது எனக்கு புரியவில்லை. இதில் அவர்களுக்கு என்ன பயம்?
எந்த கட்சியை சேர்ந்தவர்கள் 356-வது சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தினார்கள்? 90 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன. ஒரு பிரதமர் 50 முறை 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தியுள்ளார். அந்த பிரதமரின் பெயர் இந்திரா காந்தி. கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு தேர்வானது. அது நேருவுக்கு பிடிக்கவில்லை. எனவே அங்கு ஆட்சி கலைக்கப்பட்து.
தமிழ்நாட்டிலும் எம்ஜிஆர், கருணாநிதி போன்ற ஜாம்பவான்களின் ஆட்சிகளையும் காங்கிரஸ் கலைத்தது. சரத்பவார் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. என்.டி.ஆர். மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது அவரது ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒரு நபர் பலரை எப்படி பலமாக எதிர்கொள்கிறார் என்பதை தேசம் கவனித்து வருகிறது. என்னை விமர்சிக்க எதிர்க்கட்சிகளிடம் போதிய வார்த்தைகள் இல்லை. அவர்கள், தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நான் நாட்டுக்காக வாழ்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.