இந்த வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பேசக்கூடாதாம்

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளில் "சங்கி" என்ற வார்த்தையை ஏன் தடைசெய்யவில்லை என திரிணாமுல் கிண்டல்

Update: 2022-07-14 08:23 GMT

கோப்பு படம் 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டிருக்கிறது.

அந்தப் பட்டியலில் ஆங்கிலம் மற்றும் இந்தி வார்த்தைகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. அதாவது பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளாக, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதேபோல், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் போன்ற வார்த்தைகளும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகளை பயன்படுத்தினால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவுக்கான பார்லிமென்ட் வார்த்தைகளின் பட்டியலில், பாஜக எவ்வாறு இந்தியாவை அழிக்கிறது என்பதை விவரிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகளை தடை செய்கிறது. ஆனால் "சங்கி" என்ற வார்த்தை ஏன் சேர்க்கப்படவில்லை? என்று கேட்டார்.

அரசாங்கத்தின் முடிவை எதிர்த்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன், ஒரு சில நாட்களில் நாடாளுமன்றம் தொடங்கும். அப்போது வெட்கப்படுகிறேன். துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. காட்டிக்கொடுத்தார். ஊழல். போலித்தனம். திறமையற்றவர். போன்ற "அடிப்படை" சொற்களைப் பயன்படுத்தப் போவதாகவும், முடிந்தால் தன்னை சஸ்பெண்ட் செய்யுமாறு சபாநாயகருக்கு சவால் விடுத்தார்.

Tags:    

Similar News