குறைவான வட்டி விகிதத்தில் மீனவர்களுக்கு கடன்: மத்திய இணையமைச்சர் எல். முருகன் தகவல்
தற்சார்பு இந்தியா திட்டத்தின்படி 20,000 கோடி ரூபாய் மீன்வளத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது -எல். முருகன்
கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் குறைவான வட்டி விகிதத்தில் மீனவர்களுக்கு கடன் வழங்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். கொச்சி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய இணையமைச்சர் எல் முருகன், இன்று மாலை முணம்பம் பகுதி மீனவ மக்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது இணையமைச்சர் பேசுகையில், கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் குறைவான வட்டி விகிதத்தில் மீனவர்களுக்கு கடன் வழங்கப்படும், என்றார். மேலும், பள்ளி, சுகாதார வசதிகள் ஆகியவற்றுடன் கூடிய மீனவ கிராமங்களை 7.5 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு அமைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மீனவர்களுக்கென தனி துறை அமைத்தது, மீனவர்கள் நலனில் மத்திய அரசின் அக்கறையைக் காட்டுகிறது.
தற்சார்பு இந்தியா திட்டத்தின்படி 20,000 கோடி ரூபாய் மீன்வளத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து முணம்பம் மீன்பிடித் துறைமுகத்தை, மத்திய இணையமைச்சர் பார்வையிட்டார்.