ஓட்டு எண்ணிக்கையில் முன்னணி: காங்கிரஸ் தலைவராகிறார் மல்லிகார்ஜுன் கார்கே

ஓட்டு எண்ணிக்கையில் முன்னணியில் இருப்பதால் மல்லிகார்ஜுன் கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவராவது உறுதியாகி விட்டது.

Update: 2022-10-19 08:42 GMT

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை நடந்தது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கு அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்பட ராஜீவ் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் முதலில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததால் அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மல்லிகார்ஜுன் கார்கே வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை ஏ.கே. ஆண்டனி உள்பட காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் 10 பேர் முன்மொழிந்தனர். அவருக்கு எதிராக முன்னாள் மத்திய மந்திரியும் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். எனவே மல்லிகார்ஜுன் கார்கே- சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தபடி அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்கு பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 ஆயிரத்து 500 பேர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாக்களித்தார்கள். அவர்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த தேர்தலில் 711 பேர் வாக்களித்தார்கள். பாரத் ஜோடா யாத்திரையில் ஈடுபட்டுள்ள முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி. யுமான ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே அமைக்கப்பட்டு இருந்த ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பாதயாத்திரை குழுவினுடன் சென்று பதிவு செய்தார். காங்கிரஸ் கட்சியில் தற்போது இடைக்கால தலைவராக பதவி வகித்து வரும் சோனியா காந்தி டெல்லியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல் பிரியங்கா காந்தியும் வாக்கு செலுத்தினார்.


பல்வேறு மாநிலங்களிலும் பதிவாகி இருந்த வாக்குகள் அனைத்தும் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் ஐந்து மேஜைகளில் வாக்குகள் தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கை பணியில் ஆரம்பம் முதலே மல்லிகார்ஜுன் கார்கே கூடுதல் வாக்குகள் பெற்று வந்தார். இறுதியாக கிடைத்த தகவல் படி மல்லிகார்ஜுன் கார்கே 6000 கற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார். சசிதரூர் ஆயிரம் வாக்குகள் என்று அளவில் மட்டுமே பெற்று இருந்தார். ஆனாலும் தேர்தல் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வாக்கு பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக சில குற்றச்சாட்டுகள் இருந்தது. அவற்றை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள். இன்று இரவுக்குள் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இருப்பது யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மல்லிகார்ஜுன் கார்கே முன்னணியில் இருப்பதால் அவரே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.22 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் முறைப்படி மீண்டும் தற்போது தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சோனியா காந்தி குடும்பத்திற்கு அப்பாற்பட்டு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் தென் மாநிலங்களை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News