பிபின் ராவத் மறைவு: ஜனாதிபதி, பிரதமர், தலைவர்கள் இரங்கல்
முப்படைகளில் தலைமைத்தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.;
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி எனும் பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்துயர சம்பவம் தொடர்பாக, குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா மரணம், அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும், இறந்த ஒவ்வொருவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இரங்கலில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. ராவத்தின் மரணம், நமது ராணுவத்துக்கும் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். விபத்தில் இறந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். துயரத்தில் இன்று ஒன்றுபட்டு நிற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.