திருமணம் செய்து கொள்ள ராகுல் காந்திக்கு லாலு பிரசாத் அறிவுரை

"தாடி வளர்க்காதீர்கள்! திருமணம் செய்து கொள்ளுங்கள்!” என்று ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் ராகுலுக்கு அறிவுரை கூறினார்;

Update: 2023-06-24 05:47 GMT

லாலு பிரசாத்துடன் ராகுல் 

எதிர்க்கட்சிகளின் நேற்றைய கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் கலந்து கொண்டார். பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை கிடைத்தது. இந்த சிறைவாசத்தின் போது உடல்நலம் குன்றியவருக்கு, வெளிநாட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, ஜாமீன் பெற்ற லாலு, இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்திலும் அவர் பேசினார். அப்போது, காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியை பாராட்டிய லாலுவிடம், ராகுல் வளர்க்கும் தாடியை முதல்வர் நிதிஷ்குமார் ஞாபகப்படுத்தினார்.

இதை குறிப்பிட்டு பேசிய லாலு, ராகுல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஆர்ஜேடி தலைவரான லாலு கூறும்போது, "கர்நாடகாவில் பாஜகவை ராகுல் தோல்வியுறச் செய்துவிட்டார். இதற்காக அவர் நாடு முழுவதும் நடத்திய பாத யாத்திரைக்கு நல்ல பலன் கிடைத்தது. அதில் அவருக்கு தாடியும் வளர்ந்து விட்டது. அவர் இதை நீளமாக வளர்க்கக் கூடாது. பின்னர் அவருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் வித்தியாசம் இன்றி போகும்.

நீங்கள் (ராகுல்) தாடி வளர்க்காதீர். விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள், இன்னும்கூட அதற்கான அவகாசம் உங்களுக்கு உள்ளது. உங்கள் திருமணத்தின் மாப்பிள்ளை ஊர்வலத்தில் நாங்கள் அனைவரும் பங்கேற்போம். திருமணம் செய்துகொள்ளாமல் அடம் பிடிப்பதாக உங்கள் தாய் சோனியா எங்களிடம் புகார் செய்கிறார். உங்களிடம் அறிவுரை கூறுமாறு அறிவுறுத்தியுள்ளார்" என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலாக ராகுல், தனக்கு பொருத்தமானப் பெண் இன்னும் கிடைக்கவில்லை’ எனும் வகையில் சிரித்தபடி கூறினார். இதனால், செய்தியாளர்களுடன் சேர்ந்து அவர்கள் முன் அமர்ந்திருந்த தலைவர்களும் வாய்விட்டுச் சிரித்தனர். காங்கிரஸின் தேசியத் தலைவராக இருந்த ராகுல், 53 வயதாகியும் மணமுடிக்காமல் உள்ளார். இதனால் அவரிடம் இதுகுறித்து பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு எதையாவது பதிலாக பேசி ராகுல் சமாளித்து வருகிறார்.

Tags:    

Similar News