மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் பதவியேற்ற எல்.முருகன்!

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார்.

Update: 2024-04-03 10:44 GMT

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட எல் முருகன் 

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகனின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

ஏழு மத்திய அமைச்சா்கள் உள்பட 49 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) நிறைவடைந்த நிலையில், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் உள்பட 5 எம்.பி.க்களின் பதவிக் காலம் இன்றுடன்(ஏப்ரல் 3) முடிவடைகிறது.

இதில், மத்திய அமைச்சா்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோர் மாநிலங்களவைக்கு மீண்டும் தோ்வாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

91 வயதாகும் மன்மோகன் சிங், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்வாகி இருந்தார். அவரது பதவிக் காலம் நிறைவால் காலியான இந்த இடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி தோ்வாகி, முதல்முறையாக மாநிலங்களவைக்கு செல்கிறார்.

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா, கால்நடை பாரமரிப்பு-மீன் வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன், குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சா் நாராயண் ராணே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோரின் பதவிக் காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இதில் அஸ்வினி வைஷ்ணவ் தவிர மற்ற அனைத்து அமைச்சா்களும் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

மேலும், சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா, காங்கிரஸ் எம்.பி. நஸீா் ஹுசைன் ஆகியோர் மீண்டும் மாநிலங்களவைக்கு தோ்வாகியுள்ளனா்.

பாஜகவின் பிரகாஷ் ஜவடேகா், சுஷீல்குமார் மோடி ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது. ஆனால், இருவருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

மாநிலங்களவைக்கு கடந்த 1991, அக்டோபரில் முதல் முறையாக தோ்வான மன்மோகன் சிங், அந்த ஆண்டு முதல் 1996 வரை நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் நிதியமைச்சராகவும் கடந்த 2004 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தார். மாநிலங்களவையில் 33 ஆண்டு கால அவரது பயணம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

Tags:    

Similar News