சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் தடை: காரணம் இதுதான்

வரும் 19-ம் தேதி வரை சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை நீடிப்பதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-17 02:15 GMT

கோப்பு படம்

கேரள மாநிலம், பதினம்திட்டா மாவட்டத்தில் புகழ்பெற்ற சபரிமலை உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில், ஐப்பசி மாத பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு, கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி, நடையை திறந்து வைத்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள், 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனிடையே, கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கோட்டயம் மாவட்டம் கோட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மூன்று வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் 19-ம் தேதி வரை சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, கேரள அரசு அறிவித்துள்ளது. தற்போது சபரிமலையில், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News