கல்லூரி பேருந்து தீ பிடித்தது எரிந்தது - பயணம் செய்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து தீ பிடித்து எரிந்த நிலையில் 37 கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2022-04-05 05:00 GMT

கேரள மாநிலம் கண்ணூர், குற்றூர்  பகுதியிலுள்ள பி.எட் கல்லூரியில் இருந்து மாணவர்கள் 37 பேர் மற்றும் 3 ஆசிரியர்கள் கொண்ட குழு கடந்த இரு நாட்களுக்கு முன்பு கண்ணூரில் இருந்து கோவாவுக்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். நேற்றைய தினம் மாலை சுற்றுலாவை முடித்துவிட்டு கோவாவிலிருந்து- கண்ணூர் நோக்கி புறப்பட்டுள்ளனர்.  இவர்கள் சுற்றுலாவுக்கு பயன்படுத்திய பேருந்து கோவா, பனாஸ்திரி என்ற பகுதியை அடைந்ததும் பஸ்ஸின் பின் பகுதியில் இருந்து தீ பற்றி புகை வருவதை கல்லூரி மாணவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மாணவர்கள் பின் பகுதியில் தீ பற்றுவதாக பஸ் ஓட்டுனரிடம் கூறியுள்ளனர், இதனை தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்தில் ஏற்பட்ட தீ அதி வேகமாக பரவிய நிலையில் பேருந்தில் இருந்த 35 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உடனடியாக பேருந்தை விட்டு கீழே இறங்கினர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வருவதற்குள் பஸ் முழுவதுமாக தீ பிடித்து கருகியது. மாணவர்களுடைய பைகள் மற்றும் செல்போன்களும் அந்தத் தீயில் கருகின, தீ பற்ற துவங்கியதும் பஸ் நிறுத்தப்பட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் பஸ்சை விட்டு உடனடியாக வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் பஸ்ஸில் பயணித்த 37 கல்லூரி மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உட்பட ஓட்டுனரும் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் பஸ்ஸில் எற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது, தற்போது பஸ் தீக்கிரையாகும்  வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News