கேஎஸ்ஆர்டிசி யாருக்கு சொந்தம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கேஎஸ்ஆர்டிசி என்ற ஆங்கில சுருக்கத்தைப் பயன்படுத்த கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்கும், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்கும் இடையேயான சட்டப்போராட்டத்தில், கர்நாடக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் சுருக்கமாக, கேஎஸ்ஆர்டிசி என்பதை கர்நாடகமும், கேரளமும் சொந்தம் கொண்டாடின.
ஆனால், கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம்தான், காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் பொதுக் கட்டுப்பாட்டாளரிடம் முதலில் கேஎஸ்ஆர்டிசி என்ற சுருக்கத்துடன், அதன் முத்திரைக்கு காப்புரிமை பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் கேஎஸ்ஆர்டிசி என்ற சுருக்கத்தை, தாங்கள் பயன்படுத்த அனுமதி அளித்து, கர்நாடகத்துக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, கேஎஸ்ஆர்டிசி என்ற சுருக்கத்தைப் பயன்படுத்த கேரள மாநில அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்கு உரிமையில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கர்நாடக அரசு, கடந்த 1973ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல், கேஎஸ்ஆர்டிசி எனற் சுருக்கத்தைப் பயன்படுத்தி வருகிறது. இதற்கு 2013ஆம் ஆண்டு இந்திய வர்த்தக முத்திரை பதிவு ஒப்புதல் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதேப் பெயரை கடந்த 2019ஆம் ஆண்டு கேரள சாலைப் போக்குவரத்துக் கழகம் பதிவு செய்தது.
இந்த நிலையில்தான் கேரள மாநிலம் சென்னையில் உள்ள ஐபிஏபி என்ற அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தில் முறையிட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், மத்திய அரசு ஐபிஎபியை கலைத்தது.
இதனால், வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கேரள சாலைப் போக்குவரத்துக் கழகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.