கர்நாடகா அரசில் யாருக்கும் துணை முதலமைச்சர் பதவி இல்லை
கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம். 29 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர்
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 29 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். ராஜ்பவனின் கண்ணாடி மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலோட் பதவி பிராமணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சர்களாக கோவிந்த காரஜோல், கே.எஸ் ஈஸ்வரப்பா, ஆர் அசோக், டாக்டர் சி.எஸ். அஸ்வத்தநாராயனா, உமேஷ் கட்டி, வி சோமண்ணா, எஸ் டி சோமசேகர், திருமதி சசிகலா ஜொல்லே, கே.கோபாலய்யா, டாக்டர் கே. சுதாகர், பைரதி பசவராஜ், முருகேஷ் நிராணி, ஷிவ்ராம் ஹெப்பார், கே.சி.நாராயணகௌடா, சுனில்குமார், அரக்க ஞானேந்திரா, முனிரத்னா, எம் டி பி நாகராஜ், கே.சி.நாராயணகௌடா, ஹாலப்பா ஹாஜார், சங்கர பாடீல் முனெனக்கொப்பா, கோட்டா ஸ்ரீனிவாச பூஜாரி, பிரபு சவுஹான், எஸ். அங்காரா, ஆனந்த் சிங்க், மதுஸ்வாமி ஸ்ரீராமுலு, பி.சி.பாட்டில், சி.சி.பாட்டில் ஆகியோர் இன்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
பசவராஜ் பொம்மை முதல்வராக பதவி ஏற்ற பின்னர் ஒரு வாரத்தில் சரியாக அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை அமைச்சரவையில் துணை முதல்வர் பதவி கை விடப்பட்டுள்ளது. பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் விஜயேந்திராவின் பெயர் புதிய அமைச்சர்கள் பட்டியலில் இல்லை.
முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக பலமுறை போர்க்கொடி தூக்கிய யோகேஸ்வர், யதனால், அரவிந்த் பெல்லட் மற்றும் எடியூரப்பா அமைச்சரவையில் இருந்த மூத்த அமைச்சர்களான சுரேஷ் குமார், ஆர்.ஷங்கர், அரவிந்த் லிம்பாவலி, சீமந்த பாட்டில் மற்றும் லக்ஷ்மன் சவுதி ஆகியோர் இன்றைய பட்டியலில் இடம்பெறவில்லை.
கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது புதிய மந்திரிகளின் ஆதரவாளர்கள் குவிந்து இருந்தனர்.
அதேசமயம் அமைச்சர் பதவி கிடைக்காத பிஜேபி எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் கவர்னர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர் இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது