குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: கர்நாடகாவில் இன்று தொடங்கி வைக்கும் ராகுல்
மைசூருவில் நடைபெறும் விழாவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம் மைசூருவில் நடைபெறும் விழாவில் இன்று தொடங்கப்படுகிறது. இந்த விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேற்று மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
காங்கிரஸ் அரசு அறிவித்த இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை நாளை(இன்று) தொடங்குகிறோம். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இந்த திட்டத்திற்கு ரூ.17,500 கோடி செலவாகும் என்று கணக்கிட்டுள்ளோம்.
இது அரசு நிகழ்ச்சி. அதனால் மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை உறுப்பினர் என்ற அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி அல்ல.
நாங்கள் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த அரசியல் திறன் வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் திறன் மற்றும் அரசு நிர்வாக திறன் இரண்டும் உள்ளது. எங்களால் உத்தரவாத திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக நிதி நிலையை கூறி அரசு திவால் ஆகிவிடும் என்று கூறினர்.
ஆனால் நாங்கள் வெற்றிகரமாக 5 வாக்குறுதி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். ஏற்கனவே சக்தி, கிரகஜோதி, அன்ன பாக்ய ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தி உள்ளோம். இது நாங்கள் அமல்படுத்தும் 4-வது திட்டம் ஆகும். 'யுவ நிதி' விரைவில் அமல்படுத்தப்படும் என சித்தராமையா கூறினார்.