ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919, ஏப்ரல் 13ம் நாள் கோர நாடகம் அரங்கேறியது
ஜாலியன் வாலாபாக் படுகொலை என்பது அமிர்தசரஸ் படுகொலை என்றும் கூட அழைக்கப்படுகிறது.;
கணக்கிலடங்கா உயிர்ப்பலிகளும், தியாகங்களும் நிறைந்ததுதான் இந்திய தேச விடுதலையின் சரித்திரம்
ஜாலியன் வாலாபாக் படுகொலை என்பது, அமிர்தசரஸ் படுகொலை என்றும் கூட அழைக்கப்படுகிறது. நடந்த தினம் சரியாக 97 ஆண்டுகளுக்கு முன்புதான். 1919, ஏப்ரல் 13ம் நாள் இந்த கோர நாடகம் அரங்கேறியது.
இந்திய சரித்திரத்தின் முகத்தில் கருப்பு மை பூசிய கெட்ட ஞாயிற்றுக்குக் கிழமை அது. வடஇந்திய நகரமான அமிர்தசரசில், சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு 400 மீட்டர் தொலைவில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற பொது பூங்காவில் வெள்ளை காலனியாதிக்கத்தால், ஏவிவிடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகள், அப்பாவி மக்களைக் கொன்று அவர்களின் உயிரைக் குடித்தது.
இந்த நாடகத்தின் சூத்ரதாரி பிரிகேடியர் ஜெனரல் டயர் என்ற கொடுங்கோல் அரக்கன். இவன்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய பொது மைதானத்தை சுடுகாடாக்கியவன். அந்த நாசகாரப் படுகொலையில் இந்திய பிரிட்டிஷ் அரசின் தகவல்படி, 379 பேர் இறந்ததாகவும், 1,100 பேர் காயமுற்றதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
ஜாலியன் வாலாபாக்கில் நடக்க இருந்த பொதுக்கூட்ட உரையைக் கேட்க, சுமார் 15,000 - 20,000 மக்கள் குழுமி இருந்தனர். அப்பாவி ஜனங்கள்மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஜெனரல் டயர் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டான். அந்த மைதானத்தின் நான்கு பக்கமும் மதிற்சுவர். உள்ளே செல்ல ஒரே ஒரு சின்ன சந்து மட்டுமே. அதிலும் குண்டுகள் நிரப்பிய பீரங்கி நிறுத்தப்பட்டு இருந்தது. யாரும் தப்பித்தவறி தப்பிக்க நினைக்கக்கூட முடியாது. டயரின் ஆணைப்படி, ஒரே சமயத்தில் 90 துப்பாக்கிகள் சரமாரியாக இயங்கி, குண்டுகளைக் கக்கின. 10 நிமிடத்தில் 1650 ரவுண்டுகள் காலியாயின. கோர தாண்டவ ஆட்டம் போட்டு முடித்தாகிவிட்டது. ஆண். பெண், குழந்தை என வேறுபாடின்றி அனைவர் மேலும் கொலைத் தாக்குதல்..
மக்கள் வேறு வழி இன்றி, உயிர்ப்பயத்தில் அங்கிருந்த கிணற்றில் குதித்தனர். இந்திய தேசிய காங்கிரசின் கணக்குப்படி, துப்பாக்கிக் குண்டுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 1,500க்கு மேல். படுகாயம் அடைந்தவர்கள் சுமார் 3,000க்கும் மேல். ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பின் டயர் பதவி நீக்கம் செய்யப்பட்டான். ஆனால் பிரிட்டனில் அவன் கொண்டாடப்பட்டான்.
பின்னர் இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை நாடு முழுவதும் கண்டித்தது. அதன் பின் இது தொடர்பாக மக்கள் நடத்திய போராட்டத்திலும் 12 சாவுகள். அப்போது குண்டடிபட்டுக் கிடந்தவர்களுக்கும், சாவின் பிடியில் இருந்தவர்களுக்கும் குடிநீர் தந்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அவன் பெயர் உத்தம் சிங்.
இந்த நாசகார படுகொலையைக் கண்டு மனதில் வெறுப்பும், வன்மமும் வளர்ந்தது. என் மக்களை கொன்று குவித்தவர்களை நானும் கொல்வேன் என்று உறுதி எடுத்தான். அதன் பின் 21 ஆண்டுகள் தனது கோபத்தை அடைகாத்தான். படுகொலையின் கதாநாயகன் ஜெனரல் டயர் 1927லேயே இறந்து விட்டதால், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஆணை பிறப்பித்த மைக்கேல் டையரை 1940, மார்ச் 13ம் நாள், லண்டனில், காக்ஸ்டன் ஹாலில் கொலை செய்தான் உத்தம்சிங் என்ற ராம் முகமது சிங் ஆசாத். தொடர்ந்து ஆறு முறை மைக்கேல் டயரின் மேல் குண்டு பொழிந்தான் உத்தம்சிங். இதுபோன்ற கணக்கிலடங்கா உயிர்ப்பலிகளும், தியாகங்களும் நிறைந்ததுதான் இந்திய தேச விடுதலையின் சரித்திரம்