திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் புதிய ரக துப்பாக்கி அறிமுகம்
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் டிரிகா எனும் புதிய ரக துப்பாக்கியை பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார்.;
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றாகும்
இந்த துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் ராணுவம், மத்திய படை போலீசார், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் டிரிகா என்னும் துப்பாக்கியை (7.62x39மிமீ கார்பைன்) அளவில் தயாரித்துள்ளது.
அதனை திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார்.இதற்கான விழா துப்பாக்கி தொழிற்சாலையில் உள்பகுதியில் நடைபெற்றது.
இந்தத் துப்பாக்கியின் சிறப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் கூறுகையில்
டிரிகா துப்பாக்கி படைக்கலன் தொழிற்சாலையின் ஆர் & டி மூலம் உருவாக்கப்பட்ட இலகுவான சிறிய ரக ஆயுதம் ஆகும்.
டிரிகா ரக துப்பாக்கிகள் ரோந்து வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், பராட்ரூப்பர்கள், காவல்துறை, விமான நிலையாங்கள் மற்றும் சிறப்பு செயல்பாட்டு படைகள் மற்றும் மிகவும் பாதுகாப்பான கட்டிடத்தை பாதுகாக்கும் பாதுகாப்பு வீரர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சக்தி வாய்ந்த தானியங்கி ஆயுதம் ஆகும்.
இந்த துப்பாக்கியில் சிறப்பு முகவாய் பூஸ்டர் உள்ளது .இது துப்பாக்கி சூட்டின் போது ப்ளாசை மறைக்கவும், ஒலியை குறைக்கவும் உதவுகிறது. இது ஒரு வழக்கமான இயந்திர துப்பாக்கியை விட நீண்ட தூரம் தாக்கும் திறன் கொண்டதாகும்.
இந்த துப்பாக்கிக்கு அசால்ட் ரைப்பிலுக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களை இதற்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அதே போல் திருச்சி அசால்ட் ரைபிள் (டார்) மற்றும் ஏகே-47 உதிரி பாகங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.
மேலும் இந்தத் துப்பாக்கியை பாதுகாப்புப் வீரர்கள் தங்களின் கவச ஜாக்கெட்டுகள் மற்றும் உடைகளின் கீழ் கூட மறைத்து பயன்படுத்தலாம். இப்படி பல சிறப்புகளை டிரிகா துப்பாக்கி கொண்டுள்ளது என்று தெரிவித்தனர்.
புதிய ரக துப்பாக்கி அறிமுக விழாவில் கூடுதல் பொது மேலாளர்கள் ராஜீவ் ஜெயின், ஏ கே சிங் மற்றும் இணை பொது மேலாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.