தொலைதொடர்பு சேவையில் தடங்கலா? ட்ராயின் உடனடி உத்தரவு
தொலைதொடர்பு சேவையில் பெரும் தடங்கல் ஏற்படும்போது நிறுவனங்கள் 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டுமென்று ட்ராய் உத்தரவிட்டுள்ளது.
தொலைதொடர்பு சேவையில் பெரும் தடங்கல் ஏற்படும்போது நிறுவனங்கள் 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டுமென்று ட்ராய் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் (ட்ராய்) வெளியிட்டுள்ள உத்தரவில், தொழில்நுட்பக் காரணங்களாலோ அல்லது இயற்கை பேரிடர்கள் காரணமாகவோ தொலைத்தொடர்பு சேவையில் பெரும் தடங்கல் ஏற்படும்போது, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அதனை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் (ட்ராய்) தெரிவிப்பதில்லை என்பது பல நிகழ்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, எல்லைப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் நாள் கணக்காக இந்தப் பெரும் தடை நீடிப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தரமான சேவைகள் கிடைப்பதில்லை.
இந்தப் பெரும் தடைகளுக்கான அடிப்படைக் காரணங்களை புரிந்து கொள்ள, உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் உரிய ஒத்துழைப்பைப் பெறுவதுடன், தேவைப்பட்டால் மாவட்ட அளவில் தடங்கல்கள் குறித்த தகவல்களை திரட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ட்ராய் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 4 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு மாவட்டத்தின் அனைத்து நுகர்வோருக்கும் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் அது பற்றி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். இந்த பெருந்தடைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து 72 மணி நேரத்திற்குள் சேவைகளை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.