மேகாலயாவில் தொடரும் இண்டர்நெட் சேவை முடக்கம்

மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இண்டர்நெட் சேவை முடக்கத்தை மேலும் 48 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-26 01:34 GMT

கலவரத்தில் எரிக்கப்பட்ட வாகனம்.

மேகாலயாவின் ஏழு மாவட்டங்களில் இண்டர்நெட் சேவை முடக்கத்தை மேலும் 48 மணிநேரத்திற்கு மேகாலயா அரசு நீட்டித்துள்ளது.

மேகாலயா மாநிலம், அசாம் எல்லையையொட்டி உள்ள மேற்கு ஜெயின்டியா மாவட்டத்தில் கடந்த 22ம் தேதி மரம் கடத்துவதாகக் கூறி லாரி ஒன்றை அசாம் வனத்துறையினர் தடுத்துநிறுத்தினர்.

இதனையடுத்து ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு குவிந்த மக்களுக்கும், அசாம் போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறிய நிலையில், அங்கு துப்பாக்கிச்சண்டையாக மாறியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேரும், அசாமைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்தனர்.

அஸ்ஸாம்-மேகாலயா எல்லையில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சில குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மெழுகுவர்த்தி ஊர்வலத்தின் போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

பதற்றத்தை தணிக்க நிறுத்தப்பட்ட போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும், போராட்டக்காரர்களை கலைக்கவும், உத்தரவை அமல்படுத்தவும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஷில்லாங்கின் கிழக்கு காசி ஹில்ஸ் எஸ்.பி., எஸ்.நோங்ட்ங்கர்  கூறுகையில், இந்த சம்பவத்தில் மாநகர பேருந்து மற்றும் ஒரு ஜிப்சி உட்பட மூன்று போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. போராட்டக்காரர்கள் நகரத்தில் உள்ள ஒரு போக்குவரத்து சாவடியை எரித்ததாகவும், போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களின் மூலம் பரவியதால் சட்டம் ஒழுங்கை கடுமையாக சீர்குலைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் அஸ்ஸாம்-மேகாலயா எல்லைப் பகுதிகளில் நடந்த அசம்பாவித சம்பவத்தால் 6 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, மேகாலயாவின் ஜெயந்தியா மலைகள், கிழக்கு ஜெயந்தியா மலைகள், கிழக்கு காசி மலைகள், ரி - போய், கிழக்கு மேற்கு காசி மலைகள், மேற்கு காசி மலைகள் மற்றும் தென்மேற்கு காசி மலைகள் ஆகிய 7 மாவட்டங்களில் இணையதள முடக்கம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இணையதள சேவை முடக்கத்தைத் தொடர மேகாலயா அரசு  உத்தரவிட்டுள்ளது.  நவம்பர் 26 ஆம் தேதி காலை 10:30 மணி முதல் மேற்கண்ட மாவட்டங்களில் இணைய முடக்கம் தொடங்கும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை மர்மநபர்கள் போக்குவரத்துச் சாவடியை எரித்து, நகரப் பேருந்து உட்பட மூன்று போலீஸ் வாகனங்களைத் தாக்கியதை அடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Tags:    

Similar News