இந்திய ரயில்வேயின் 20 அகலப்பாதை என்ஜின்கள் பங்களாதேஷிடம் ஒப்படைப்பு
இந்திய ரயில்வே 20 அகலப்பாதை என்ஜின்களை பங்களாதேஷிடம் ஒப்படைத்துள்ளது.
புதுதில்லி ரயில்பவனில் இன்று நடைபெற்ற விழாவில் பங்களாதேஷ் நாட்டுக்கு 20 அகலப்பாதை ரயில் என்ஜின்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
பங்களாதேஷில் இருந்து அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் முகமது நூருல் இஸ்லாம் சுஜன் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில், ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஏ.கே. லஹோட்டி, வாரிய உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், பங்களாதேஷ் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், பங்களாதேஷூடனான இந்தியாவின் உறவு கலாச்சார, சமூக, பொருளாதார உறவாகும் என்றார். இந்தத் துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளின் பிரதமர்களும், ஆக்கபூர்வ பங்களிப்பை செய்து வருகின்றனர். எல்லைப்பகுதியில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தி வலுப்படுத்துவதிலும் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகரிப்பதிலும் இந்திய ரயில்வே முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
காணொலிக் காட்சி மூலம் இந்த நிகழ்வில் பங்கேற்ற பங்களாதேஷ் அமைச்சர் முகமது நூருல் இஸ்லாம் சுஜன், இந்திய அரசின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
ஏற்கனவே 2020 ஜூன் மாதத்தில் இந்திய அரசு, பங்களாதேஷூக்கு மானியமாக 10 என்ஜின்களை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், தற்போது அகல ரயில் பாதை என்ஜின்களை வழங்குவதற்காக இந்தியாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிப்பிதாகக் கூறினார். இது பங்களாதேஷில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்போக்குவரத்துக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.