விடுமுறையில் வீடு திரும்பிய காஷ்மீர் ராணுவ வீரர் மாயம்
விடுமுறையில் சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்திருந்த ஜாவேத் அகமது நேற்று முன்தினம் இரவு தனியார் வாகனத்தில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.;
காஷ்மீரில் காணாமல்போன இந்திய ராணுவ வீரர் ஜாவேத் அகமது
ஜம்மு காஷ்மீர் லைட் காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த ரைபிள்மேன் ஜாவேத் அஹ்மத், ஈத் விடுமுறையில் வீட்டிற்கு வந்தார். அவர் நாளை திரும்பி வந்து பணியில் சேர இருந்தார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் சந்தையில் இருந்து சில பொருட்களை வாங்க வெளியே வந்தார். இவர் ஆல்ட்டோ காரை ஓட்டி வந்தார். இரவு 9 மணி ஆகியும் அவர் திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடத் தொடங்கினர். கார் சந்தைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது மற்றும் அதில் இரத்தக் கறைகள் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இவர் லடாக்கின் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலை அவர் அஜதலில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க, காரில் சவல்ஹம் பகுதிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் ஜாவித் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜாவித் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமங்களில் ஜாவித்தை தேடினர். அப்போது, பரன்ஹல் என்ற கிராமத்தின் அருகே ஜாவித் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் கதவுகள் திறக்கப்பட்டிருந்தது. காரின் இருக்கையில் ரத்தக்கறை இருந்தது. மேலும், ஜாவித்தின் செருப்புகளும் கார் அருகே கிடந்தன.
இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து காவல்துறை , ராணுவம், பாதுகாப்புப்படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர் ஜாவித்தை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் கார் கண்டு பிடிக்கப்பட்ட பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவ வீரரின் குடும்பத்தினர், அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக சந்தேகித்து, வீடியோ அறிக்கையை வெளியிட்டு, அவரை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். "தயவுசெய்து எங்களை மன்னித்துவிடு. என் மகனை விடுதலை செய், என் ஜாவேதை விடுதலை செய். அவனை ராணுவத்தில் பணிபுரிய விடமாட்டேன், ஆனால் தயவு செய்து விடுவிடு" என்று அவரது தாய் வீடியோவில் கூறியுள்ளார்.
ராணுவ வீரரின் தந்தை முகமது அயூப் வானி கூறுகையில், “எனது மகன் லடாக்கில் பணியமர்த்தப்பட்டான். ஈத் முடிந்து வீட்டிற்கு வந்த அவர் நாளை மீண்டும் பணியில் சேரவிருந்தார். இவர் நேற்று மாலை மார்க்கெட்டில் பொருட்களை வாங்க வெளியில் வந்துள்ளார். அவரை சிலர் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர். நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவுசெய்து என் மகனை விடுவிக்கவும் என கூறியுள்ளார்
எனினும், அவர் கடத்தப்பட்டதை காவல்துறையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே இந்த பகுதியில் விடுமுறையில் வந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ஜாவித் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.