டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ப் போட்டி; இந்திய வீராங்கனை அதிதி அதிர்ச்சி தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அஷோக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது. தற்போது மகளிருக்கான கோல்ப் தனிநபர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 4 சுற்றுகள் நடைபெறும். நடந்து முடிந்த 3-வது சுற்றின் முடிவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தார்.
இன்று காலை அதிதி அசோக் பங்கேற்ற 4-வது சுற்றுப் போட்டி தொடங்கியது. அப்போது, மழை குறுக்கீட்டால் போட்டி பாதிக்கப்பட்டது. மோசமான வானிலையால் போட்டி நிறுத்தப்படும் முன்பாக 3-வது இடத்தில் அதிதி அசோக் இருந்தார்.
இந்நிலையில், தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே பிரிவு போட்டியில் அதிதி அசோக் நான்காவது இடம் பிடித்து தோல்வியடைந்தார். இப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை நெல்லி கோர்டா முதலிடம் பிடித்தார். அதிதி அசோக்குக்கு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோல்வியடைந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் கோல்ப்பில் இந்தியர்கள் யாரும் இதுவரை பதக்கத்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.