அமெரிக்காவிடம் ராணுவ ட்ரோன்கள் வாங்க இந்தியா முடிவு
இந்திய ராணுவ பயன்பாட்டுக்கு 30 தாக்குதல் ரக ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா விரைவில் வாங்கவுள்ளது;
தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான ஏவுகணைகளை ஏவுவதற்கு, எம்.க்யூ.-9பி ரக ஆளில்லா சிறிய ரக விமானங்களை (ட்ரோன்கள்) வாங்குவதற்கு பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் வழங்க உள்ளது. பின்னர் அந்த பரிந்துரை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பப்படும்.
ட்ரோன்களின் விலை, அதில் இணைக்கப்பட வேண்டிய தளவாடங்கள் உள்ளிட்டவை தொடா்பாக அமெரிக்காவிடம் ஏற்கெனவே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு விட்டது.
நடப்பு 2021-22ம் நிதியாண்டிலேயே இவை வாங்கப்படவுள்ளது. அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 ட்ரோன்கள் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தலா 10 வீதம் வழங்கப்படும். .
அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ட்ரோன்கள் வானில் தொடா்ச்சியாக 35 மணி நேரம் வரை பறக்கக் கூடியவை. கண்காணிப்பு, உளவு, இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குதல் போன்ற பணிகளுக்கு இந்த ட்ரோன்கள் பயன்படும்.