India Vs Bharat: இரண்டு பெயர்களையும் ஏற்று கொள்கிறேன் என்கிறார் ராகுல்

பாரத் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி இரண்டு பெயர்களையும் ஏற்று கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்

Update: 2023-09-10 15:18 GMT

ராகுல் காந்தி 

செப்டம்பர் 18ஆம் தேதி கூடும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி ஜி20 உச்சி மாநாட்டின் இரவு விருந்திற்காக உலக தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில், இந்திய குடியரசு தலைவர் என குறிப்பிடுவதற்கு பதில் பாரத குடியரசு தலைவர் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதை தொடர்ந்து, ஆசியான் மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் தொடர்பான அறிவிப்பிலும் இந்தியா என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டது. இந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்பே, மற்றொரு சர்ச்சை வெடித்தது. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கையின் முன்பு இந்தியா என குறிப்பிடுவதற்கு பதில் பாரத் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், செப்டம்பர் 18ஆம் தேதி கூடும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என பல்வேறு தகவல்கள் வெளியான உள்ளன. ஆனால், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. பாரத் பெயர் மாற்ற விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றன.

இந்த நிலையில், இரண்டு பெயர்களை ஏற்று கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெல்ஜியம் சென்றுள்ளார். அங்கு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இரண்டு பெயர்களையும் பயன்படுத்துவதில் உண்மையில் சிக்கல் எதுவும் இல்லை. ஏனெனில், இரண்டும் அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பே இந்தியா, அதாவது பாரதம், அது மாநிலங்களின் ஒன்றியம் என்று தொடங்குகிறது. நான் உண்மையில் அதில் எந்த பிரச்சனையையும் பார்க்கவில்லை. இரண்டு வார்த்தைகளும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை.

ஆனால், நாங்கள் எங்கள் கூட்டணிக்கு ‘I.N.D.I.A’ என்று பெயரிட்டதால் அது அரசாங்கத்தை எரிச்சலடையச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இதனால் அவர்கள் மேலும் கோபப்பட்டு நாட்டின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளார்கள். எங்கள் கூட்டணிக்கு இரண்டாவது பெயரை கூட வைக்க முடியும். மக்கள் விசித்திரமான முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றார்.

இந்தியாவில் இந்து தேசியவாதம் அதிகரித்து வருகிறதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவின் ஆன்மாவுக்காக போராட எதிர்க்கட்சிகள் உறுதிபூண்டுள்ளன. தற்போதைய கொந்தளிப்பான சூழ்நிலையில் இருந்து நாடு நன்றாக மீண்டு வரும். நான் கீதை படித்திருக்கிறேன். பல உபநிடதங்களைப் படித்திருக்கிறேன். பல இந்து புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இந்து மதத்தில் சொன்னதை எல்லாம் பாஜக பின்பற்றுவது இல்லை. அதில் ஒன்றை கூட செய்வதில்லை என்றார்.

Tags:    

Similar News