இந்திய அஞ்சல் துறை: குடியரசு தின அலங்கார ஊர்தியில் மகளிர் பணிகளுக்கு முன்னிலை
167 ஆண்டுகளாக நாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன், சேவைபுரிந்து வருகிறது இந்திய அஞ்சல் துறை. நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் அயராது பாடுபட்டு வருகிறது. நாடு 75-வது சுதந்திர ஆண்டை, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடி வரும் நிலையில், தனது குடியரசு தின அலங்கார ஊர்தி மூலம், மகளிர் அதிகாரமளித்தலுக்கு உறுதி அளிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
'இந்திய அஞ்சல்; மகளிர் அதிகாரமளித்தலில் 75 ஆண்டுகள்' என்னும் மையக் கருத்துடன் அலங்கார ஊர்தி அணிவகுக்க உள்ளது. அஞ்சல் நிலையங்கள் மற்றும் அஞ்சல் வங்கிகளில் பெரும்பான்மை வாடிக்கையாளர்கள் பெண்களே. அனைத்து மகளிர் அஞ்சல் நிலையங்கள், அஞ்சல் சேவையில் பெண்கள், அஞ்சல் விநியோகத்தில் பெண்கள் என பல்வேறு அம்சங்கள் ஊர்தியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. செல்வ மகள் சேமிப்பு திட்டம், ஜம்மு காஷ்மீரில் மிதக்கும் அஞ்சல் நிலையம் போன்றவையும் இதில் இடம்பெறும்.