இந்தியாவில் சூரிய ஒளி மின்சக்தி கருவி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்
இந்தியாவில் சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் மற்றும் கருவிகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் அழைப்பு;
சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் மற்றும் கருவிகளின் தொகுப்புகளை உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைப்பதை மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மரில் 2.4 மெகாவாட் திறனுள்ள சூரியஒளி மின்சக்தி நிலையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் இன்று எம்.வெங்கையா நாயுடு பேசியதாவது:
சூரியஒளி மின்சக்தி தகடுகள் மற்றும் கருவிகளின் தொகுப்பை இந்தியா இன்னும் அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. இவற்றின் உற்பத்தியில் மாநிலங்கள் தீவிரமாக பங்காற்றுவதன் மூலம் சூரிய ஒளி மின்சக்தியில் தற்சார்பு நிலையை அடைய முடியும். சூரியஒளி மின்சக்தி தொடர்பான சிறு தொழில் துறையினரை ஊக்குவிக்க வேண்டும்.
அடுத்தசில ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வளர்ச்சிக்கு சாத்தியம் உள்ளது. இத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் குறைவாக இருப்பது, இத்துறையின் வேகமாக வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்ய வேண்டும். சூரிய மித்ரா திட்டம், இத்துறையில் இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கிறது. பருவநிலை மாற்றம் மற்றும் அதன் பாதிப்புகள் கவலை அளிப்பதாக உள்ளன. சூரிய மின்சக்தி, காற்று மின்சக்தி, நீர் மின்சக்தி போன்றவை நமது அதிகரிக்கும் எரிசக்திதேவைகளை நிறைவேற்றுவதற்கு மாற்று எரிசக்தியாக இருக்கும்.
எரிசக்தி மாற்றத்தில் உலகளவில் முன்னணி நாடாக இந்தியா மாறிவருகிறது. 40 ஜிகாவாட்டுக்கு மேற்பட்ட சூரிய ஒளி மின்சக்தி கருவிகள் நம்நாட்டில் பொருத்தப்பட்டுள்ளன. சூரிய ஒளி மின்சக்தி திறனில் உலகளவில், இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
சூரியஒளி மின்சக்தி துறையில் புத்தாக்கம் முக்கியமானது. நிலப் பகுதியில் சூரியஒளி மின்சக்தி தகடுகளை பொருத்துவதற்கு மாற்றாக, மிதவை சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்துவதற்கான மாற்று வழிகளை ஆராய வேண்டும்.
தெலங்கானா ராமகுண்டத்தில் 100 மெகாவாட் திறனுள்ள மிதக்கும் சூரியஒளி மின்சக்தி நிலையத்தை என்டிபிசி அமைத்துள்ளது. கட்டிடத்தின் கூரைகள் மீது சூரியஒளி மின்சக்தி தகடுகள் பொருத்துவதும், நிலையானது என்பதால், அதுவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஆராய்ச்சி திட்டங்களை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும். இறுதி ஆண்டு படிப்பில், மாணவர்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் திட்டங்கள் மேற்கொள்ளவும், வேலை வாய்ப்பு பயிற்சிபெறவும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இது வேலைவாய்ப்பை மேம்படுத்துவதோடு சூரிய மின்சக்தி துறையில் புத்தாக்கத்துக்கும் உதவும். இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் என் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் ஆர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.