தோரியம் இருப்பை மின்உற்பத்திக்கு பயன்படுத்துவது முக்கியம்: அணுசக்தி வாரிய தலைவர்
தோரியம் இருப்பை மின்உற்பத்திக்கு பயன்படுத்துவது முக்கியம்: அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய தலைவர்
அணுசக்தித்துறையின் இரண்டாவது பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவான கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அமைப்பு தினம் 2022 ஏப்ரல் 30 அன்று கொண்டாடப்பட்டது. அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த டாக்டர் விக்ரம் சாராபாயின் நிர்வாக உத்தரவின்படி 1971 ஏப்ரல் 30 அன்று அணு உலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. இது 1985 டிசம்பரில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதிவேக ஈனுலைக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் எரிபொருள் மறுசுழற்சி மேம்பாட்டு சோதனைக்கூட தொடக்கவிழா ஆகியவற்றின் 50-வது ஆண்டாகவும் உள்ளது.
இன்று நடைபெற்ற அமைப்பு தின விழாவில் மும்பையில் உள்ள அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவர் ஜி நாகேஸ்வரராவ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அணுப்புரம் நகர்ப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கதிர்வீச்சு கண்காணிப்பு அமைப்பை அவர் இன்று தொடங்கிவைத்தார்.
இந்த விழாவில் அதிவேக ஈனுலை பரிசோதனை அணுஉலையின் பயணம்- மேலும் உச்சங்களுக்கு செல்லுதல் என்ற ஆவணத்தை தலைமை விருந்தினர் வெளியிட, அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் பி போஜே பெற்றுக் கொண்டார்.
பெருமளவில் உள்ள தோரியம் இருப்பை பயன்படுத்துவது முக்கியம் என்று தமது உரையில் திரு நாகேஸ்வரராவ் குறிப்பிட்டார். அணு தொழில்நுட்பம் எதிர்கொள்ளும் சவால்களை சிறந்த தலைமை மற்றும் அணி முயற்சிகள் மூலம் வெற்றி கொள்வது அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
முனைவர் பட்டம், முதுநிலை பொறியியல், முதுநிலை தொழில்நுட்பம் ஆகியவற்றை நிறைவு செய்தவர்களுக்கு இந்தூரில் உள்ள நவீன தொழில்நுட்பத்திற்கான ராஜா ராமண்ணா மையத்தின் இயக்குனர் டாக்டர் சங்கர் வி நாகே, சான்றிதழ்களை வழங்கினார். "கல்பாக்கத்தின் பட்டாம் பூச்சிகள்" என்ற நூலினையும் அவர் வெளியிட்டார். இதன் முதல் பிரதியை கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் எஸ் ஏ வி சத்யமூர்த்தி பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் எஸ் ரகுபதி, டாக்டர் பி வெங்கட்ராமன், ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம், டாக்டர் டி கே சின்ஹா, டாக்டர் பி ஆர் வாசுதேவராவ், கே.ஆர்.சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.