எனக்கு புற்றுநோய்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

எனக்கு புற்றுநோய் இருந்தது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

Update: 2024-03-04 13:19 GMT

இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் இஸ்ரோ இயக்குநர் சோம்நாத்திற்கு புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையில் தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு அவர் மீண்டு வந்துள்ளார்.

கேரளத்தை சேர்ந்த சோம்நாத் இஸ்ரோவின் இரு முக்கிய மைல்ஸ்டோன்களான சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 ஆகிய திட்டங்களின் போது இஸ்ரோ தலைவராக இருந்து மற்ற விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியுாக இருந்துள்ளார்.


சந்திரயான் 3 என்பது நிலவின் தென் பகுதிக்கு அனுப்பப்பட்ட மாபெரும் திட்டமாகும். நிலவின் தென் பகுதிக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அது போல் நிலவில் கால் பதித்த 4ஆவது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் வானிலை மாற்றங்கள் தொடர்பான செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பிய நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில் சந்திரயான் 3 செயற்கைகோள் செலுத்தப்பட்ட போது உடலில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. எனது வயிற்றில் கட்டி போல் இருந்த நிலையில் அதை மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். இதையடுத்து ஸ்கேன் முடிவுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி வந்தன. அப்போது எனக்கு குடல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அந்த தினத்தில்தான் ஆதித்யா எல் 1 என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஒரு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.


புற்றுநோய் என முடிவுகள் வந்த போது எனக்கு பேரிடியாகத்தான் இருந்தது. அதைவிட என் குடும்பத்தினர் என்னுடன் பணியாற்றுவோருக்கும் பெரும் இடியாக இந்த தகவல் இருந்தது. ஆனால் நான் எந்த வித வேதனையையும் வெளிப்படுத்தாமல் இந்தியாவின் விண்வெளி துறைக்கு வளர்ச்சிக்கு வித்திடும் ஆதித்யா எல் 1 இல் கவனம் செலுத்தினேன்.

இதையடுத்து எனக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஒரு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து 4 நாட்கள் மருத்துவமனையில் இருந்த நான் 5ஆவது நாள் பழையபடி புது தெம்புடன் ஓடியாடி வேலை செய்ய தொடங்கிவிட்டேன். தொடர் மருத்துவ சிகிச்சைத்தான் தீர்வு என்ற வகையில் 5ஆம் நாள் முதல் வலியே இல்லை. இவ்வாறு சோம்நாத் தெரிவித்திருந்தார்.

சோம்நாத்திற்கு புற்றுநோயால் அத்தனை வலி இருந்த போதிலும் எத்தனை அர்ப்பணிப்புடன் ஆதித்யா எல் 1 திட்டம் விண்ணுக்கு செலுத்திய போது இருந்திருந்தார் என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். எது எப்படியோ புற்றுநோய் வந்தாலே வாழ்க்கையே இருண்டு விட்டதாக கருதுவோர் மத்தியில் இன்று நான் குணமாகிவிட்டேன், தொடர் சிகிச்சைதான் காரணம் என சோம்நாத் கூறுவது புற்றுநோய் என்றில்லை எந்த நோய்க்கும் அது நம்பிக்கையூட்டும் மருந்தாகவே இருக்கும். இதுநாள் வரை சோம்நாத்திற்கு புற்றுநோய் பாதிப்பு என்ற தகவல் வெளியே தெரியாத நிலையில் இன்று தானே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் தாக்குதல் என்பது ஏழை பணக்காரன், ஆண்டி அரசன், பாமரன் பரம விஞ்ஞானி என்று வேறுபாடு பார்ப்பது இல்லை.  இதை உலகிற்கு உணர்த்தும் வகையில் தான் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தையும் புற்றுநோய் தாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் அதனை தனது மன வலிமையால் வென்று உள்ளார்.

Tags:    

Similar News