பாஜகவில் இணையும் ஆனந்த் சர்மா? ஜேபி நட்டாவை சந்தித்த மர்மம்
இமாசல பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா பாஜக தலைவர் நட்டாவை நேற்று மாலை சந்தித்தார்
ஆனந்த் ஷர்மா, அரசியலில் மூத்த தலைவர் மற்றும் "ஜி-23" அதிருப்தி காங்கிரஸ் தலைவர்களின் குழுவின் உறுப்பினராவார். இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, ஆனந்த் சர்மா நாடாளுமன்றத்தின் மேல்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆனந்த் சர்மா நேற்று மாலை பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "பாஜக தலைவர் ஜேபி நட்டாவை நான் சந்திக்க வேண்டும் என்றால், அவரைச் சந்திக்க எனக்கு முழு உரிமையும் உள்ளது. என்னைப் பொறுத்தவரை அவர் பாஜக தலைவர் அல்ல. நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்து வருகிறோம், எங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம். இதில் எந்த அரசியல் உள்நோக்கம் கிடையாது.
நான் அவரைச் சந்திக்க வேண்டும் என்றால், நான் வெளிப்படையாகச் செல்வேன். இதில் என்ன பெரிய விஷயம்? நான் காங்கிரசை சேர்ந்தவன். கொள்கை ரீதியாக எதிராக இருந்தாலும், எங்களுக்குள் தனிப்பட்ட பிளவு இருப்பதாக அர்த்தமில்லை என்று அவர் மேலும் கூறினார்.
G-23 இன் முக்கியமான உறுப்பினரான ஆனந்த் சர்மா, கட்சித் தலைமையிடம் பலமுறை, அடிக்கடி பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.