நாலு வருஷமா என்ன பண்ணீங்க? கேரளா அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
ஹேமா கமிட்டி அறிக்கை வந்து 4 ஆண்டு ஆகியும் நடவடிக்கை எடுக்காத மாநில அரசுக்கு கேரளா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மலையாள திரையுலகத்தையே கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டியின் அறிக்கை உலுக்கி எடுத்து வருகிறது. திரையுலகில் காலம், காலமாக பாலியல் கொடுமை நடந்து வருவதாக அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருப்பதே ஒட்டுமொத்த அதிர்ச்சிக்கு காரணம். இந்நிலையில் ஹேமா கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட முழு அறிக்கை, சீலிடப்பட்ட கவரில் கேரளா உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதிபதி ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், நீதிபதி சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது. அப்போது, அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது: ஹேமா கமிட்டி அறிக்கையை வைத்துக் கொண்டு 4 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? எதுவும் செய்யாமல் அரசு மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அறிக்கை டி.ஜி.பி.,யிடம் வழங்கப்பட்டும் ஏன் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்
பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: மலையாள திரையுலகில் போக்சோ உள்ளிட்ட குற்றங்கள் நடந்திருப்பதை ஹேமா கமிட்டி அறிக்கை உறுதி செய்துள்ளது. அறிக்கையில் பல்வேறு ரகசிய விசாரணை விபரங்கள் இருப்பதால் அதை முழுமையாக பாதுகாக்க வேண்டும். அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆடியோ, வீடியோ பதிவுகளை சிறப்பு புலானாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். விசாரணை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது. எப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது உட்பட அரசின் செயலற்ற தன்மையை நாங்கள் கவனிக்கிறோம். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.