குழந்தைகளுக்கு இனி ஹெல்மெட் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
இந்தியாவில், 4 வயதிற்குட்பட்ட குழந்தைகள், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயம்; இது அடுத்தாண்டு பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.;
நாட்டில், சாலை விபத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு சராசரி 6 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் பெரும்பாலான மரணங்களுக்கு, ஹெல்மெட் அணியாதது காரணமாகும். இதை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும், ஹெல்மெட் அணிவதை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, 40 கி.மீ. வேகத்திற்கு மேல் வண்டியை ஓட்டக்கூடாது என்றும், மீறினால் ரூ.1000 அபராதம் அல்லது 3 மாதம் ஒட்டுனர் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு ஏற்றவகையில், அவர்களின் அளவுக்கேற்ப , உரிய பாதுகாப்பு அம்சங்களுடன், ஹெல்மெட் தயாரிக்கவும் அதன் தயாரிப்பாளர்களுக்கு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்த புதிய விதி, அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு கழித்து, அதாவது அடுத்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய கூறியுள்ளது.