கேரள தங்கம் கடத்தல் வழக்கு : 44 பேருக்கு அபராதம்
தங்கம் கடத்தலில் தொடர்புடைய 44 பேருக்கும் மொத்தம் ரூ.66.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள சுமார் 30.245 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. ஒரு நாட்டின் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நடந்ததால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அப்போதைய அமீரக தூதரக துணைத்தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ், தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார், ஸ்வப்னா சுரேஷுக்கு ஆதரவாக செயல்பட்ட முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஜனவரி 2021ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தின் முன்னாள் நிதித் தலைவர் கலீத் முகமது அலி சௌக்ரி, சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப், யுனிடாக் எம்.டி. சந்தோஷ் ஈப்பன், கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கர் ஆகிய 6 பேர் குற்றம் சாட்டப்பட்ட 40 பக்க குற்றப்பத்திரிகையில் சுங்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக சுங்கத்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின.
இது தொடர்பான வழக்கு தற்போது எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தங்க கடத்தலில் நேரடியாக ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ், எஸ் சரித், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோருக்கு தலா ரூ.6 கோடி வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு ரூ.50 லட்சம் அபராதம். டாலர் கடத்தல் வழக்கில் ஈப்பனுக்கு ரூ.1 கோடியும், கலீத் முகமது அலி சௌக்ரி ரூ.1.3 கோடியும் அபராதமாக செலுத்த வேண்டும் என்று கொச்சி சுங்கத் தடுப்பு ஆணையர் ராஜேந்திர குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரித் மற்றும் சந்தீப் ஆகிய இருவருக்கும் ரூ.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.என தங்கம் கடத்தலில் தொடர்புடைய 44 பேருக்கும் மொத்தம் ரூ.66.65 கோடி அபராதம் செலுத்த மத்திய சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு கமிஷனர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.