இந்தியாவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக்கப்படுகிறதா?
இந்தியாவில் தினசரி பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறைந்ததன் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததால், கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன், நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பும் உயர்ந்துள்ளது. நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு தற்போது, 1,000-ஐ தாண்டி உள்ளது.
ஏற்கனவே, ஒமைக்ரான் தொற்றின் புதிய திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ள நிலையில், தற்போது, டெல்லி உட்பட சில மாநிலங்களில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில், ஜூன் மாதத்தில் கொரோனா தொற்றின் நான்காவது அலை வீசக் கூடும் என ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போதே கொரோனா பரவல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.