விமானத்தில் மயக்கமடைந்த பயணிக்கு முதலுதவி செய்த தமிழிசை

நடுவானில் விமானத்தில் மயக்கமடைந்த பயணிக்கு கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் முதலுதவி செய்து சிகிச்சை அளித்தார்;

Update: 2022-07-23 16:19 GMT

தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், இன்று டெல்லியிலிருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார்.

அதே விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, திடீரென மயக்கம் ஏற்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்ததால், விமான பணிப்பெண் அங்கிருந்த பயணிகளில் யாரேனும் மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் இருந்ததால், மயக்கமடைந்த பயணிக்கு முதலுதவி அளிக்குமாறு கேட்டுள்ளார்.

அப்போது உடனடியாக மருத்துவரான தமிழிசை அந்த பயணியிடம் சென்று ஸ்டெதஸ்கோப் வைத்து பார்த்து, தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தார். இதன்பின் சிறிது நேரத்தில் அந்த பயணி கண்விழித்ததால் சக பயணிகள் நிம்மதியடைந்தனர். பின்னர் அந்த பயணியின் அருகிலேயே அமர்ந்து உடல்நிலையை கண்காணித்தபடியே கவர்னர் தமிழிசை பயணம் செய்தார்.

இருப்பினும், விமானத்தில் CPR கிட் கிடைப்பதை உறுதிசெய்யவும், விமானத்தில் பயணிக்கும் மருத்துவர்களின் விவரங்களை முன்கூட்டியே சேகரிக்கவும், இதனால் அவர்கள் அவசர நேரத்தில் கிடைக்கும்படி ஊழியர்களிடம் கூறினார்

விமானம் ஐதராபாத் இறங்கியதும் அந்த பயணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பயணியின் நிலையை கண்டு உடனடியாக செயல்பட்ட விமான பணிப்பெண்ணை தமிழிசை பாராட்டினார்.

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், ஒரு மருத்துவராக தனது கடமையை சரியான நேரத்தில் செய்ததற்காக தமிழிசை சௌந்தரராஜனுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News