இந்திய தடகள வீரர்கள் சர்வதேச பயணங்கள் மேற்கொள்ள அரசு நிதியுதவி
இந்திய தடகள வீரர்கள் மற்றும் படகோட்டும் குழுவினர் சர்வதேச பயணங்கள் மேற்கொள்ள அரசு ரூ.3.65 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது;
இந்தாண்டு நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டுக்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2022 உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் மற்றும் உத்திகளை இந்திய தடகள வீரர்களும் அறிந்து கொள்ள உள்ளனர். ஏப்ரல் மாதத்தில் அது போன்ற இரண்டு பயணங்களை அரசு செலவில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடுத்தரம் மற்றும் நீண்ட தொலைவுக்கான 12 தடகள வீரர்களைக் கொண்ட இந்திய தடகள அணி, இரண்டு பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு பணியாளர் உள்ளிட்டோர் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஏப்ரல் 15 முதல் ஜூன் 6 வரை அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங் பகுதிக்கு செல்ல உள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் 3,000 மீட்டர் ஸ்டிபிள் சேஸ் போட்டியில் பங்கேற்ற அவினாஸ் சாப்லே இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளார். இந்தப் பயணத்திற்காக அரசு ரூ. 1.19 கோடியை அனுமதித்துள்ளது.
அதே போன்று 400 மீட்டர் தடகள போட்டி 4 x 100 மீட்டர் போட்டிகளில் பங்கேற்கும் 31 வீரர்கள், 4 பயிற்சியாளர்கள், 5 ஊழியர்கள், ஏப்ரல் 10 முதல் ஜூன் 6 வரை துருக்கி நாட்டின் அண்டாலியா நகரில் பயிற்சி மற்றும் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அமோஜ் ஜேக்கப், ஆரோக்கிய ராஜீவ், நோவா நிர்மல் டாம், முகமது அனாஸ் யாஹியா, தொடர் ஒட்டத்தில் பங்கேற்ற சுபா வெங்கடேசன் மற்றும் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பிரிவுகளில் பங்கேற்ற டூட்டி சந்த் உள்ளிட்டோரும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களது பயணத்திற்கு அரசால் மொத்தம் ரூ.1.57 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று 11 ஆடவர் மற்றும் 7 பெண்கள் உட்பட 18 படகோட்டும் வீரர்கள் அடங்கிய இந்திய படகோட்டி குழு, 6 பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு பணியாளர்கள் அரசின் முழு செலவில் ஏப்ரல் மாதத்தில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாட்டில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற விஷ்ணு சரவணன், கே சி கணபதி, வருண் தக்கர் மற்றும் நேத்ரா குமரன் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு மொத்தம் ரூ.89.27 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.