சிறந்த ஊழியர் விருது வாங்கியவரை பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனம்
பணி நீக்கம் குறித்து அந்த ஊழியர் ஹர்ஷ் விஜய்வர்கியா சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவொன்றை எழுதியுள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட், கூகுள் என மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
இந்நிலையில், ஆல்பபெட் 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி இந்தியாவில் உள்ள 450 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. வேலையிழந்த கூகுள் நிறுவன ஊழியர்கள் வலைத்தளத்தில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஐதராபத்தைச் சேர்ந்த ஹர்ஷ் விஜய்வர்கியா கூகுள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து பதிவொன்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய பதிவில், நான் சிறந்த ஊழியர் விருதை வென்றுள்ளேன். எனினும் என்னை ஏன் பணிநீக்கம் செய்தார்கள் என்று புரியவில்லை. 12000 ஊழியர்களில் நானும் ஒருவனாக பாதிக்கப்பட்டுள்ளேன். இருப்பினும் நான் ஏன் பணிநீக்கம் செய்யப்பட்டேன் என்று தெரியவில்லை” என்று எழுதியுள்ளார். இவரைப் போன்றே பல்வேறு ஊழியர்கள் உருக்கமான பதிவுகளை எழுதி வருகின்றனர்.