பிளாஸ்டிக்கைக் கொடுங்க, தங்ககாசு வெல்லுங்க: ஊராட்சி தலைவரின் தனித்துவமான முயற்சி
பிளாஸ்டிக் கை கொடுத்து தங்கக்காசு பெறுங்கள் என்ற தனித்துவமான யோசனை ஜம்மு காஷ்மீர் கிராமத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றியுள்ளது;
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சதிவாரா என்ற தொலைதூர கிராமத்தில், கிராம ஊராட்சி தலைவர் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற ஒரு தனித்துவமான முயற்சியைத் தொடங்கினார். பிளாஸ்டிக்கைக் கொடு தங்கத்தை எடுத்துக்கொள் என்ற பிரச்சாரத்தை அவர் தொடங்கினார், அங்கு கிராம மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து ஊராட்சி தலைவரிடம் தங்க நாணயம் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொழிலால் வழக்கறிஞரும், சதிவார கிராமத்தின் தலைவருமான பரூக் அகமது கணாய், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைவருக்கும் ஒரு உத்வேகமாக மாறியுள்ளார். ஒரு தங்க நாணயத்தைப் பெற, ஒரு நபர் 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைக்க வேண்டும்.
இந்த பிரசாரம் பிரபலமடைந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, முழு கிராமமும் பிளாஸ்டிக் இல்லாததாக அறிவிக்கப்பட்டது.
ஃபரூக் அகமது கணாய் இது குறித்து கூறுகையில், “எனது கிராமத்தில் பாலிதீன் கொடு, வெகுமதி பெறு என்ற முழக்கத்தை ஆரம்பித்தேன். ஆறுகள், ஓடைகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஊரில் உள்ள அனைவரும் அந்த இடங்களைத் தூர்வார உதவினார்கள். கடைசியாக ஜனவரி 7ஆம் தேதி துணை ஆணையர் அந்தப் பகுதியை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவித்தார். நாங்கள் அளிக்கும் தங்கம், சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் இருந்து கிடைக்கும். விரைவில் எங்கள் கிராமத்தை பசுமையான கிராமமாக மாறுவோம், இந்த முயற்சி எனது கிராமத்தில் நிற்காமல் யூனியன் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், பின்னர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை எடுத்துச் செல்வேன்" என்றார்
அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட முயற்சி கானாயின் முயற்சி தனித்து நிற்கிறது. முழு கிராமமும் இந்த இயக்கத்தில் பங்கேற்றது, இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிளாஸ்டிக் இல்லாத முதல் கிராமம் இதுவாகும். அப்பகுதி இளைஞர்கள், கிராமத்தைச் சுத்தப்படுத்தி, பள்ளத்தாக்கு மற்றும் நாட்டிற்கு முன்னுதாரணமாக, ஊராட்சி தலைவருடன் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
இளைஞரணி தலைவரும், ஆர்வலருமான ஷகீல் வானி கூறுகையில், “மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு 2014 இல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஸ்வச் பாரத் அபியான் எங்கள் தொடக்கப் புள்ளியாக இருந்தது. எங்கள் ஊராட்சி தலைவர் அத்தகைய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல, எங்கள் அனைவரையும் அழைத்துச் செல்வதை உறுதி செய்கிறார். எங்கள் கிராமத்தை பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாற்ற இரண்டு வாரங்கள் எடுத்துக் கொண்டோம். இதை மற்ற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வோம்,'' என தெரிவித்தார்.
கிராமத்தின் வழியாக ஓடும் ஓடைகள் தற்போது சுத்தம் செய்யப்பட்டு, இந்த ஓடைகளை அடைத்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் தற்போது தெளிவாக உள்ளது. பெண்களும் இம்முயற்சியில் கலந்து கொண்டு சாலைகள், ஓடைகள் மற்றும் வயல்களை சுத்தம் செய்வதிலும் உதவினர்.
"நாங்கள் இப்போது நான்கு மாதங்களாக ஊராட்சி தலைவருடன் வேலை செய்கிறோம், அவர் கடினமாக உழைக்கிறார். எங்கள் கிராமம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்து அதைச் செய்தார். அதை உங்கள் கண்களால் பார்க்கலாம். அவர் ஒரு நல்ல பின்னணியில் இருந்து வந்தவர் ஆனால் அதையும் மீறி அந்த பகுதியில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்வதை பார்க்கலாம். அவரது கடின உழைப்பு தான் எங்கள் கிராமம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்கிறது. பிளாஸ்டிக் கொடுத்து தங்கம் பெறுவோம். இது அப்பகுதியில் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது,'' என அங்கன்வாடி பணியாளர் சகீனா பேகம் தெரிவித்தார்.
முன்பு சாலைகளில் பிளாஸ்டிக் குவியல்களாக வீசப்பட்ட கிராமம் தற்போது முற்றிலும் சுத்தமாகி, சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் அனைத்தும் ஊராட்சி உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த கிராமம் மற்ற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது, மேலும் இதே கருத்தை யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பிரதிபலிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.