ரூ. 500க்கு சிலிண்டர், இலவச மின்சாரம்: ராகுல் வாக்குறுதி
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று ராகுல் தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, மாநிலக்கட்சிகள் என அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் குஜராத் தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சி சார்பில், அகமதபாத்தில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அகமதாபாத் சென்ற ராகுல் காந்தி அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை அறிவித்தார்.
அதில், குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படும் என்றார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும், 3,000 ஆங்கில வழிப் பள்ளிகளைத் திறந்து, பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும், பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ. 5 மானியம் வழங்கப்படும், தற்போது 1,000 ரூபாய்க்கு விற்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றார்.